சனி, 24 பிப்ரவரி, 2024

நாட்டை ஒருங்கிணைக்கும் ஆட்சி மத்தியில் உருவாக்கப்படும் – கனிமொழி எம்.பி பேட்டி!

 இந்த நாட்டிற்கு உண்மையாகவே உழைக்கக்கூடிய இந்த நாட்டை ஒருங்கிணைந்து ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய ஒரு ஆட்சி உருவாக்கப்படும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.

2024 மக்களவை தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

இதற்காக திமுக சார்பில் எம்பி கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டனர். அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் வந்தனர்.

அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய திமுக எம்பி கனிமொழி,

“திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் கன்னியாகுமரி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றோம். இன்று ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள நெசவாளர்கள், விவசாயிகள், நெல் அரிசி உற்பத்தியாளர்கள், அரிசி ஆலை தொழிலதிபர்கள், நாடக கலைஞர்கள் அடித்தட்டு விவசாய பெருங்குடி மக்கள் உள்ளிட்டோரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வரப் பெற்றுள்ளன.அதில் மாநில அரசாங்கம் செய்ய வேண்டியவைகள் குறித்தும் ஒரு சில கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. அதிகமாக மத்திய பாஜக அரசு செய்ய வேண்டிய பணிகளை வலியுறுத்தி தான் பெரும்பான்மையான கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. அதில் முக்கியமாக ஜிஎஸ்டி வரியில் உள்ள குழப்பங்கள். அதில் வியாபாரிகள் சிறுகுறு தொழில் செய்யும் தொழில் முனைவோர்கள் இவர்களெல்லாம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த ஜிஎஸ்டில் உள்ள குழப்பங்களை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். தொடர்ந்து எந்த பகுதிக்கு போனாலும் ஜிஎஸ்டி பற்றிய மனு கொடுத்து உள்ளனர். மத்திய அரசாங்க பட்ஜெட்டில் வடக்கே இருக்கும் மாநிலங்களுக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள்.? தென் மாநிலங்களுக்கு எவ்வளவு குறைத்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என எல்லோருக்கும் தெரியும்.

கிட்டத்தட்ட தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டியது 20 ஆயிரம் கோடி ரூபாய் இன்னும் வரவில்லை என தமிழ்நாடு நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இப்படி ஒவ்வொரு திட்டத்திலும் நமக்கு வரவேண்டிய நிதி மிகக் குறைவாகத்தான் வருகிறது. முதலமைச்சர் இன்று கூட வலியுறுத்தி கூறினார்.

நாம 1 ரூபாய் கொடுத்தால் நமக்கு திருப்பி வருவது 26 பைசா தான். ஆனால் உபி போல மாநிலங்களுக்கு அவர்கள் 1 ரூபாய் கொடுத்தால் அவர்களுக்கு ரூ.2.02 அளவுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? திமுக தேர்தல் அறிக்கை என்பது நிறைவேற்றப்படக்கூடிய தேர்தல் அறிக்கை. எல்லா தேர்தல்களிலும் கொடுக்கக்கூடிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வந்து கொண்டிருக்கிறோம்.

நிச்சயமாக மத்திய அரசாங்கம் மாறும். இந்த நாட்டிற்கு உண்மையாகவே உழைக்கக்கூடிய இந்த நாட்டை ஒருங்கிணைந்து ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய ஒரு ஆட்சி அங்கே உருவாக்கப்படும்” இவ்வாறு திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார். 


source https://news7tamil.live/a-government-that-unifies-the-country-will-be-created-in-the-middle-kanimozhi-mp-interview.html