வியாழன், 29 பிப்ரவரி, 2024

ஜிந்தாபாத் சர்ச்சை: குற்றச்சாட்டு உண்மையானால்.. எச்சரித்த சித்த ராமையா!

 மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் உசேன் வெற்றி பெற்றதையடுத்து, செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்களை எழுப்பியதாகக் கூறி கர்நாடக சட்டப்பேரவைக்கு வெளியே பாரதிய ஜனதா கட்சியினர் புதன்கிழமை (பிப்.28,2024) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

விதான சவுதா காவல்நிலையத்தில் பாஜக முறையான புகார் அளித்தபோதும், இந்தச் சம்பவம் தொடர்பாக பெங்களூரு நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து சில மணி நேரங்களுக்குப் பிறகு சித்தராமையாவின் அறிக்கை வந்துள்ளது. இந்தச் சம்பவத்தை ஒளிபரப்பிய டிவி சேனல்களில் இருந்து போலீசார் வீடியோ காட்சிகளை சேகரித்துள்ளனர்.

இது மேலதிக விசாரணைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (எஃப்எஸ்எல்) அனுப்பப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த நிலையில், “இதுபோன்ற முழக்கம் எழுப்பப்பட்டதாக எஃப்எஸ்எல் அறிக்கை நிரூபணமானால், நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சித்தராமையா கூறினார்.

மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்களை பாதுகாப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று சித்தராமையா விதான சவுதாவில் செய்தியாளர்களிடம் உறுதிப்பட கூறினார்.

அப்போது அவர், “தேசத்திற்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், ஹுசைன் பாஜகவின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவரது ஆதரவாளர்கள் சிலர் நசீர் சாப் ஜிந்தாபாத் கோஷங்களை எழுப்பியதாக கூறினார்.

அப்போது, “நான் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு ஊடக நிறுவனத்தில் இருந்து யாரோ இப்படி ஒரு கோஷம் எழுப்பியதாக அழைப்பு வந்தது.

நான் அந்த மக்கள் மத்தியில் இருந்தேன், அத்தகைய கோஷம் எதையும் கேட்டதில்லை. அவர் சொன்ன விஷயத்தை போலீஸ் விசாரிக்கட்டும்” என்றார்.


source https://tamil.indianexpress.com/india/pakistan-zindabad-slogan-row-action-will-be-taken-if-bjp-allegations-proven-true-says-siddaramaiah-4103580