ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

வேலைவாய்ப்பு தேவைப்படும் இடங்களுக்கு முதலமைச்சர் தொழில் முதலீட்டை கொண்டு வருகிறார் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

 தென் மாவட்டங்களுக்கு சிறப்பு வளர்ச்சி வேண்டும் என்பதற்காக டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் என வேலைவாய்ப்பு தேவைப்படும் இடங்களுக்கு தொழில் முதலீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் மின்சார வாகன தயாரிப்பில் முன்னணி வகிக்கும் வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிதாக அமைக்க இருக்கும் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த விழா மேடையில் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா  கூறியதாவது:

“இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த மாபெரும் தொடக்கம், தமிழ்நாட்டின் முற்போக்கான தொழில்துறை கொள்கைகளை மீண்டும் உறுதிப்பட எடுத்துரைக்கிறது. மேலும் உலகளாவிய வாகன புதுமைக் கண்டுபிடிப்புச் சூழலுக்கும், உற்பத்திக்கும் தமிழ்நாட்டை மிகச்சிறந்த உற்பத்தி மையம் என மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் பங்கு அமைந்திருக்கிறது.

நாட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் விரும்பும் லட்சிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏற்ற இடமாக தமிழ்நாடு இருக்கும். மேலும் கார்பன் வெளியேற்றம் இல்லாத பூஜ்ஜிய உமிழ்வு போக்குவரத்தை எல்லோராலும் எளிதில் பெறக்கூடிய ஒன்றாக மாற்றுவதில் தமிழ்நாடு உறுதிபூண்டுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த தொடக்கம், உலகளாவிய விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகன சந்தையான இந்தியாவில், மிக துரிதமாக வளர்ச்சிக்கண்டு வரும் மின்சார வாகனப் போக்குவரத்துப் பிரிவில் வேகமான வளர்ச்சியை எட்டுவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தூத்துக்குடியில் அமையும் இந்த ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு சுமார் 150,000 கார்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது பெரும் பங்களிப்பதோடு 3,000 முதல் 3,500 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் இது வழங்கும். இந்நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே உள்ளூர் மயமாக்கலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் உலக அளவில் சிறந்த விநியோகத் தளத்துடன் இணைந்து செயல்படும்.

தமிழ்நாட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதலீடு, வியட்நாமிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விரிவான உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்நிறுவனத்தின் உலகளாவிய எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவை, தனது சர்வதேச சந்தை விரிவாக்கத்திற்கு ஒரு உந்துசக்தியாக இந்த நிறுவனம் பயன்படுத்துகிறது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விழா, உள்நாட்டிலும் உலக அளவிலும் விரைவான முறையில் பசுமை போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.

அதிநவீன உற்பத்தி ஆலையை கட்டமைப்பதோடு மட்டுமில்லாமல், ஒரு சந்தையில் வலுவான பிராண்ட் செயல்பாட்டை உருவாக்கவும், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை விரைவாகச் சென்றடையவும், நாடு தழுவிய விற்பனையாளர் கட்டமைப்பை நிறுவ வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது. வின்ஃபாஸ்ட் இந்திய சந்தையில் ப்ரீமியம் தரத்திலான தயாரிப்புகள், எல்லோராலும் வாங்குவதற்கு ஏற்ற போட்டித் தன்மையுடன் கூடிய விலையில் விற்பனை, விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் ஆகியவற்றை வழங்க உறுதிபூண்டுள்ளது. இது மின்சார வாகனப் போக்குவரத்தை பரவலாக சென்றடையும் தன்மை கொண்டதாக மாற்றும்” இவ்வாறு விழா மேடையில் பேசினார்.

தொடர்ந்து, நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தென் மாவட்டங்களுக்கு சிறப்பு வளர்ச்சி வேண்டும் என்பதற்காக டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் என வேலைவாய்ப்பு தேவைப்படும் இடங்களுக்கு தொழில் முதலீட்டை கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

“வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி நிறுவனம் 15 மாதங்களுக்குள் உருவாக்கப்பட்டு வாகனங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரி மாதத்தில் கையெழுத்திட்டு பிப்ரவரி மாதத்தில் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்றால் இது தான் முதலமைச்சரின் செயல்திறன். ஆட்டோ மொபைல் ஹலெட்சர் தூத்துக்குடியில் உருவாகும். கிடப்பில் உள்ள நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா விரைவில் துவங்கப்படும்.

10 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டில் உருவாகி உள்ளன. எங்கெல்லாம் தொழில் வளர்ச்சி இல்லையோ அங்கெல்லாம் தொழில் முதலீட்டை ஈர்த்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என அவர் தெரிவித்தார்.


source https://news7tamil.live/chief-minister-brings-business-investment-to-places-where-employment-is-needed-minister-d-r-p-raja-exclusive-interview-to-news7-tamil.html