சனி, 17 பிப்ரவரி, 2024

இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள்” – கனிமொழி எம்.பி

 

“இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள்” என உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நடைபெற்று வரும் பரப்புரை கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பேசியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக இன்று முதல் மூன்று நாட்களுக்கு திமுக தொடர் பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறது. ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நெல்லை பெல் மைதானத்தில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உரையாற்றினார். அவர் பேசியதாவது;

ஒரு மசோதாவை நிறைவேற்றுவது முதல் அனைத்து திட்டங்களிலும் மாநில உரிமைகளை, அடையாளங்களை மறைப்பதும், தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவதும் மத்திய அரசின் வழக்கமாக உள்ளது. தென்னாட்டு மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் தடைகளை தாண்டி தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தேர்தல் பத்திரங்கள் செல்லாது என நேற்று உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜக 2018ல் இருந்து 2023வரை 6,564 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளது. ஏழைகளை, ஒடுக்கப்பட்டவர்களையும், மத நல்லிணக்கம் என எதை பற்றியும் கவலைபடமால் மத அரசியலை கொண்டு வந்து ஆட்சி நடத்தி கொண்டு இருக்கின்றனர்.

இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள், இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும். பாஜக வெற்றி என்பது இந்த நாட்டின் தோல்வி. உத்தர பிரதேசத்திற்கு மத்திய அரசு நிதியை அள்ளிக் கொடுக்கிறது. அங்கு பா.ஜ.க. 10 வருடங்களாக ஆட்சியில் இருந்தும் ஏன் அது இன்னும் வளர்ச்சி பெறாத மாநிலமாக இருக்கிறது என்பதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.


source https://news7tamil.live/the-day-the-indian-alliance-wins-is-the-day-the-indian-country-wins-kanimozhi-mp.html