சென்னை மெரினா கடற்கரையில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (பிப்.26) திறந்து வைக்கிறார். புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தில் சுரங்க மியூசியம், 7டி திரைகள், தொடுதிரை காட்சிகள், செல்ஃபி பாயிண்ட்கள், நூலகம், கருணாநிதியின் வாழ்க்கை பற்றிய குறிப்பு உள்ளிட்ட பல நவீன அம்சங்கள் உள்ளன.
நினைவிடத்தின் சில பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பளிங்குகள் ராஜஸ்தான் மற்றும் வியட்நாமில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. நினைவிடம் முன், 2005-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட போது, கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதிய கடிதம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு 'கலைஞர் உலகம்' என்ற பெயரில் சுரங்க மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் செல்லும் வழித்தடத்தில் திருவள்ளுவர் சிலை மற்றும் கருணாநிதியின் முதல்வராக இருந்த போது செய்த
சாதனைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அருங்காட்சியத்தில் கருணாநிதி செல்ஃபி பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருப்பது போல் சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் செல்ஃபி எடுக்கலாம். தொடு திரைகளில், கருணாநிதியின் 8 முக்கிய படைப்புகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவரது சுயசரிதை, திருக்குறள் பற்றிய விளக்கம் மற்றும் அவரது முக்கிய நாவல்கள் உள்ளிட்டவை அதில் உள்ளன.
அடுத்து அங்கு நிறுத்திவைக்கப்பட்ட ரயில் போன்ற 7டி திரைகள் உள்ளது. இதை பார்க்கும் போது திருவாரூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் செல்வது போல் பார்வையாளர்கள் உணர்வார்கள். கருணாநிதிவாழ்க்கையின் முக்கியமான தருணங்கள், அவர் பங்கேற்ற போராட்டங்கள், அவர் செயல்படுத்திய திட்டங்கள் குறித்தான புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/karunanidhi-memorial-opening-key-facilities-4002717