இளங்கலை மருத்துவம், இளங்கலை அறுவை சிகிச்சை எனப்படும் எம்.பி.பி.எஸ் (MBBS) மிகவும் விரும்பப்படும் படிப்புகளில் ஒன்றாகும், மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. மக்களவையில் சமீபத்தில் அளித்த பதிலில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், 2014-க்கு முன் இருந்த 51,348 எம்.பி.பி.எஸ் இடங்கள் 112% அதிகரித்து, தற்போது 1,08,940 ஆக உயர்த்தப்பட்டுள்ளன என்று கூறினார்.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG 2024) என்பது அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் இடங்களுக்குச் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாகும். தேசிய தேர்வு முகமை (NTA), மே 5 அன்று நீட் தேர்வை நடத்தியது. 24 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர். தேசிய தேர்வு முகமை அறிவித்த அட்டவணையின்படி, நீட் தேர்வு முடிவுகள் 2024 ஜூன் 14 அன்று அதிகாரப்பூர்வ இணையதளமான exams.nta.ac.in/NEET/ இல் அறிவிக்கப்படும்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 2014ஆம் ஆண்டுக்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள் தற்போது 706 ஆக, அதாவது 82% அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில், 2018-19ல் 499 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 2022-23ல் 648 ஆகவும், 2018-19ல் 70012 இடங்களாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்கள் 2022-23ல் 96077 இடங்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன, என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, நாடு முழுவதும் இந்த ஆண்டு 1,08,940 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகபட்சமாக 5,275 எம்.பி.பி.எஸ் இடங்களும், மகாராஷ்டிரா அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,125 இடங்களும் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகள் பிரிவில், கர்நாடகாவில் அதிகபட்சமாக 7,995 எம்.பி.பி.எஸ் இடங்களும், தமிழகத்தில் 6,375 எம்.பி.பி.எஸ் இடங்களும்ம் உள்ளன
source https://tamil.indianexpress.com/education-jobs/neet-ug-2024-india-has-more-than-one-lakh-mbbs-seats-tamil-nadu-top-in-govt-medical-colleges-4729468