வியாழன், 23 மே, 2024

கொரோனா எதிரொலி – சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை!

 

கொரோனா எதிரொலி – சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை! 23 5 2024


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. 

கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் கே.பி.2 என்ற புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இது இந்தியாவிலும் ஒரு சில பகுதிகளில் பதிவாகி உள்ளது.  ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை அச்சமோ,  பதற்றமோ தேவையில்லை எனவும் ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்தில் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவிற்கு நாள்தோறும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.  மேலும் கோவை – சிங்கப்பூர் இடையே வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது.  விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் மூலம் காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  தற்போது பரவக்கூடிய புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சுகாதாராத்துறை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

source https://news7tamil.live/corona-echo-fever-test-for-passengers-coming-from-singapore.html