கடந்த இரண்டு நாட்களில் இந்தூர் நிர்வாகம் பல்வேறு சமூகங்களின் 258 மத ஸ்தலங்களில் இருந்து 437 ஒலிபெருக்கிகளை அகற்றிய பிறகு, முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் திங்களன்று அதிகாரிகளை சந்தித்து இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்க, மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒலி பெருக்கி சாதனங்களை அகற்ற சனிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது. 258 வெவ்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து மொத்தம் 437 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன, அவை நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை விட அதிகமாக இருந்தன. கோவில்கள் அல்லது மசூதிகள் என அனைத்து குழுக்களுடனும் பேசி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூடுதல் டி.சி.பி ராஜேஷ் தண்டோடியா கூறினார்.
இனி வரும் காலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என இந்த இடங்களின் நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று ராஜேஷ் தண்டோடியா கூறினார்.
இந்தூரின் ஷஹர் காசி, முகமது இஷ்ரத் அலி தலைமையிலான குழுவினர், ஆட்சியர் ஆஷிஷ் சிங்கை சந்தித்து நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்தனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முகமது இஷ்ரத் அலி, “கோவில்கள், மசூதிகள் என எதுவாக இருந்தாலும், நகரத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் இருந்தும் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அனுமதிக்கப்பட்ட இரைச்சல் வரம்பிற்குள், மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை அனுமதிக்கக் கோருகிறோம்,” என்று கூறினார்.
மத வழிபாட்டுத் தலங்களில் மட்டும் ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது ஏன்? திருமணங்களில் உரத்த இசையை இசைக்கும் டி.ஜே.,க்களை ஏன் தடை செய்யவில்லை என்று முகமது இஷ்ரத் அலி கேள்வி எழுப்பினார்.
மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங், மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில் மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அனைவரும் இந்த உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், காவல்துறை அதிகாரிகளுடனான சந்திப்பில், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதைச் சுற்றியுள்ள வழிகாட்டுதல்களை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோகன் யாதவ் கடந்த ஆண்டு முதலமைச்சராகப் பதவியேற்ற ஒரு நாளுக்குப் பிறகு, அவர் மதக் கூட்டங்கள் மற்றும் பொது இடங்களில் ஒலிபெருக்கிகள்/ டி.ஜே.,க்களை தடை செய்யும் உத்தரவை பிறப்பித்திருந்தார், மேலும் "சட்டவிரோதமாக இறைச்சி, மீன் போன்றவற்றை வாங்குதல் மற்றும் விற்பதை தடுக்க தீவிர பிரச்சாரத்தை" அறிவித்தார்.
கூடுதல் தகவல்கள் – பி.டி.ஐ
source https://tamil.indianexpress.com/india/muslim-delegation-meets-authorities-after-437-loudspeakers-religious-places-in-indore-4653318