புதிய ரேஷன் கார்டு பெற தமிழகத்தில் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அரசு நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தது. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூறுகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதிலும் இருந்து 2.40 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்தாண்டு ஜூலை மாதத்தில் இருந்து புதிய ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது சுமார் 2.40 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு புதிய கார்டுகள் வழங்கும் பணி தொடங்கும் எனத் தெரிவித்தனர்.
இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 2,24,19,359 ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன. ரேஷன் கார்டு மிக முக்கிய அடையாள அட்டையாகும். குறிப்பாக மாநில அரசின் நலத்திட்டங்களைப் பெற ரேஷன் கார்டு மிக முக்கிய ஆவணமாகும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ரேஷன் கார்டு அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/2-lakh-people-applied-for-new-ration-card-when-they-will-get-4605078