சனி, 25 மே, 2024

6ம் கட்ட மக்களவை தேர்தல் : 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

 

6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று 6ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது.

6ம் கட்ட வாக்குப்பதிவு இன்றும் (மே 25), 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இதன்படி, 6வத் கட்ட வாக்குப்பதிவு பீகார் (8), ஜார்கண்ட் (4), ஜம்மு காஷ்மீர் (1), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), ஹரியானா (10) மற்றும் டெல்லி (7) ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

6வது கட்ட வாக்குப்பதிவில் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களைத் தேர்ந்தெடுக்க 5.48 கோடி ஆண் வாக்காளர்கள், 5.29 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 5,120 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11.13 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1.14 லட்சம் வாக்குச்சாவடிகள் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடன் தயார் நிலையில் உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

6-ம் கட்ட வாக்குப்பதிவு தொகுதிகள்: பீகாரில் வால்மீகி நகர், வைஷாலி உள்பட 8 மக்களவைத் தொகுதிகள், ஹரியானாவில் அம்பாலா, ஹிசார், சோனிபட் உள்பட 10 தொகுதிகள், ஜார்கண்டில் ராஞ்சி மற்றும் ஜாம்ஷெத்பூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோல், ஒடிசாவில் சம்பல்பூர், கட்டாக் உள்ளிட்ட 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் நகர், சரஸ்வதி உள்பட 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் பங்குரா உள்பட 8 தொகுதிகள், டெல்லியில் உள்ள அனைத்து 7 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், ஜம்மு மற்றும் மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

source https://news7tamil.live/6th-phase-of-lok-sabha-elections-voting-has-started-in-58-constituencies.html