செவ்வாய், 21 மே, 2024

அஸ்ஸாம் முதல்வர் பரப்பிய போலிச் செய்தி!

 

This News Fact Checked by BOOM 

டெல்லி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி கையில் சீனாவின் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி பரப்புரையில் ஈடுபட்டார் என அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருந்தார். இதன் உண்மைத் தன்மை குறித்து பூம் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்

டெல்லி தேர்தல் பரப்புரை – அரசியலமைப்பு புத்தகத்துடன் ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி மாலை 6 மணியளவில் நிறைவடைகிறது.  6 மாநிலங்கள்,  2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.  இதில் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள்,  மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள்,  மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள்,  பீகார் மற்றும் ஒடிசாவில் 5 தொகுதிகள்,  ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகள் என 6 மாநிலங்களில் 47 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.  ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் தலா தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் வருகிற மே25ம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரை மே 18ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருமே பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளரகளை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.

அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி கையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டப் புத்தகத்தை ஏந்தியவாறு பேசினார்.

https://x.com/himantabiswa/status/1791425606279983105

இந்திய அரசியலமைப்பு புத்தகமா..? – சீனாவின் அரசிலமைப்பு புத்தகமா?

 

சில தினங்களுக்கு முன்பு அஸ்ஸாம் மாநில முதலமைச்சரான ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அதில் தெரிவித்துள்ளதாவது..

”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் புத்தகம் நீல நிற அட்டையில் இருக்கும். அதேபோல சீன அரசியலமைப்பு புத்தகத்தின் அட்டை  சிவப்பு நிறத்தை கொண்டது. அப்படியெனில் ராகுல் காந்தி சீன அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்திருக்கிறாரா..?  நாம் இதனை சரிபார்க்க வேண்டும்.” என ஹிமந்தா பிஸ்வா ஷர்மா எழுதியிருந்தார்.

உண்மை சரிபார்ப்பு :

ஹிமந்த பிஸ்வா ஷர்மாவின் எக்ஸ் தள பதிவை ’பூம்’ உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. அதன்படி அஸ்ஸாம் முதலமைச்சரின் எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்ட போஸ்டிற்கு கிழே பலர் ராகுல் காந்தி பயன்படுத்திய அதே நிறத்திலான இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சிலர் பரிசளித்துள்ளனர் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அதேபோல “ராகுல் காந்தியின் பேரணி – இந்திய அரசியலமைப்பு சட்டம்” என்கிற கூகுள் கீவேர்ட் தேடலை பூம் பயன்படுத்தி ஆய்வு செய்தது.  இதன் பதிலாய் சிறிய சிவப்பு நிற அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்துடன் ராகுல் காந்தி பல படங்களை கொண்ட பல செய்திகளை ‘பூம்’  கண்டறிந்தது.  பிடிஐ செய்தி நிறுவனம் படம்பிடித்த ராகுல்ம் காந்தியின் படத்தை பிசினஸ் ஸ்டாண்டர்ட் மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவை செய்தி நிறுவனங்கள் செய்திகளாக வெளியிட்டன.  அப்படத்தில் இடம்பெற்றுள்ள புத்தகத்தின் அட்டையில் உள்ள வாசகம் தெளிவாகக் காணப்பட்டது, அதில் “இந்திய அரசியலமைப்பு சட்டம்” என்று எழுதப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ’பூம்’  நிறுவனம் “இந்திய அரசியலமைப்பு சட்டம் – சிவப்பு நிற அட்டை” என்ற முக்கிய வார்த்தை தேடலை மேற்கொண்டது.  தேடலின் முடிவில் கோபால் சங்கர நாராயணனின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கோட் பாக்கெட் பதிப்பை விற்கும் ஆன்லைன் சந்தைகளுக்கான பல இணைப்புகள் கிடைத்தன.  அதேபோல  அமேசானில் சீன அரசியலமைப்பு புத்தகத்தை தேடியபோது  அது ராகுல் காந்தி பயன்படுத்திய புத்தகத்தைப் போலல்லாமல் முற்றிலும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது.

முடிவு:

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி கையில் சீனாவின் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி பரப்புரையில் ஈடுபட்டார் என அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தெரிவித்தது முற்றிலும் தவறானது அது போலிச் செய்தி என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/did-rahul-gandhi-campaign-with-the-constitution-of-china-fake-news-spread-by-the-chief-minister-of-assam.html