வெள்ளி, 17 மே, 2024

தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’!

 16/05/2024

தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்தது. ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. சென்னையில் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெயில் இருந்து வந்தது. எனினும் வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்து வந்தனர்.

இதனிடையே, கோடை மழையும் வெப்ப அலையும் சேர்ந்து இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிப்பு வெளியானது. அதேபோல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில பகுதிகளில் மட்டுமே லேசான மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் இருந்து பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து சில பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று (மே 16) அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில்  பரவலாக மழை பெய்தது. சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

சிவப்பு நிற எச்சரிக்கை:

இன்று (மே 16) தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வரும் 20-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு நிற எச்சரிக்கை:

தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற எச்சரிக்கை:

கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/red-alert-for-thanjavur-pudukottai-ramanathapuram-districts.html