வியாழன், 23 மே, 2024

வலுப்பெற்ற தாழ்வு மண்டலம்: வங்கக்கடலில் உருவாகும் ரீமால் புயல்

 

வலுப்பெற்ற தாழ்வு மண்டலம்: வங்கக்கடலில் உருவாகும் ரீமால் புயல்


23 05 2024 
Cyclone Remal: தமிழகத்தில் ஏப்ரல் மாத கடைசி வாரங்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால், துவண்டு போன மக்கள் எப்போது கோடை மழை  பெய்யும் என காத்திருந்தார்கள். இந்நிலையில், தற்போது கோடை வெப்பம் தணிந்து, பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று புதன்கிழமை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழையும், வருகிற 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை மிதமானது முதல் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பிறகு தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து 25 ஆம் தேதி புயலாக உருவாகக்கூடும். இந்த புயலுக்கு ஓமன் நாட்டின் பரிந்துரைப்படி "ரீமால்" என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் 26-ம் தேதி மாலை மேற்குவங்காளத்திற்கு அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் வடக்குப்பகுதியில் நகரும்போது தமிழகத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/cyclone-remal-depression-forming-over-bay-of-bengal-brings-rainfall-in-west-bengal-orecast-updates-in-tamil-4597843

Related Posts: