திங்கள், 20 மே, 2024

ஜுன் 4-ம் தேதிக்கான முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது” – பிரியங்கா காந்தி பதிவு

 

மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகவும்,  இந்தியா கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும்,  88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும்,  93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும்,  96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.  இதனையடுத்து,  6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும்,  7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது.  தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் உஜ்வல் ராமன் சிங்கை ஆதரித்து இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,  சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.  அவர்களின் உரையைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.   இதனையடுத்து,  காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி,  இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது,  ”இந்தியா கூட்டணிக்காக கூடிய மாபெரும் கூட்டம் இது.  பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.  அவர்களை முன்னேற்ற வேண்டும்.  ஜுன் 4ஆம் தேதிக்கான முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.  பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றிபெறச் செய்யப்போகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

https://x.com/priyankagandhi/status/1792151548988117416


source https://news7tamil.live/results-fixed-for-4th-june-priyanka-gandhi-posted.html