உத்திரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளருக்காக 7 முறை வாக்களிகத்த இளைஞரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் நாடளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களரக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், உத்திரபிரதேச மாநிலத்திலும் 7 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து கடந்த மே 13-ந் தேதி 4-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
இந்த 4-வது கட்ட தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபருக்காபாத் தொகுதியில் நடைபெற்ற, வாக்குப்பதிவின்போது, ஒரு இளைஞர் பா.ஜ.க.வேட்பாளருக்காக 8 முறை வாக்களிக்கும் வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது. வாக்களித்த அந்த இளைஞரே அதனை வீடியோவும் எடுத்துள்ளார். இந்த வீடியோ பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையமே இதை கொஞ்சம் பாருங்கள். இப்போதாவது கொஞ்சம் வழித்திருங்கள் என்று பதிவிட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் ஒரு கொள்ளை கமிட்டி தான் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவை வைத்து எதிர்கட்சியினர் பா.ஜ.க.வுக்கு கடும் விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.
உத்திரபிரதேசத்தில் உள்ள எட்டா மாவட்டத்தில் உள்ள நயா காவ்ன் நகரில், ஒரு அடையாளம் தெரியாத சிறுவன் 8 முறை வாக்குகள் செலுத்தியதாக வெளியான வீடியோவின் அடிப்படையில் நடத்தை விதிகளை மீறியதாகவும், பிற குற்றங்களுக்காகவும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் எந்த வாக்குச்சாவடியில் நடைபெற்றது என்று அடையாளம் கண்டுள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள் அந்த இளைஞர் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் பி திரிபாதி அளித்த புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். எங்கள் விசாரணையின் ஒரு பகுதியாக, வீடியோவில் காணப்பட்ட இளைஞரை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/evm-malfunctioning-fir-in-up-over-video-of-boy-voting-8-times-4590897