சனி, 25 மே, 2024

கேரளாவின் கோட்டயத்தில் அரசு கோழிப் பண்ணையில் ஏவியன் பறவைக் காய்ச்சல் பரவல்

 கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் கோழி, வாத்து, காடை மற்றும் பிற பறவைகளின் கோழிப் பண்ணைப் பொருட்கள் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

கோட்டயத்தில் மணற்காட்டில் உள்ள அரசு மண்டல கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் (H5N1) பரவியிருப்பது மாவட்ட நிர்வாகத்தால் உறுதி செய்யப்பட்டது.

ஏவியன் பறவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து, கோழிப் பண்ணையிலிருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவில் அனைத்து வளர்ப்பு மற்றும் செல்லப் பிராணிகளையும் கருணைக்கொலை செய்து எரிக்க முடிவு எடுக்கப்பட்டது என்று மாவட்ட நிர்வாகம் வியாழக்கிழமை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியில் கிருமிநாசினி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோழிப் பண்ணையிலிருந்து 1 முதல் 10 கிமீ சுற்றளவு வரை கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கோட்டயம் மாவட்டத்தில் கோழி, வாத்து, காடை மற்றும் பிற பறவைகளின் கோழிப் பொருட்களை விற்பனை செய்யவும் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

கால்நடை பராமரிப்புத் துறையால் நடத்தப்படும் கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவுவதை மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி உறுதி செய்ததைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற துறைகளுக்கிடையேயான கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த கோழிப் பண்ணையில் சுமார் 9,000 கோழிகள் வளர்க்கப்பட்டதாக அறிக்கை கூறியது. மேலும், மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வகம், இந்த பண்ணையில் அதிக அளவில் இறந்த கோழிகளின் மாதிரிகளைச் சோதித்த பிறகு, எச்.5.என்.1 (H5N1) வைரஸ் காய்ச்சல்  பரவல் உறுதி செய்யப்பட்டது.

source https://tamil.indianexpress.com/india/avian-flu-outbreak-state-run-poultry-farm-kerala-kottayam-4602587