மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானின் முன்னாள் மேயர் அப்துல் மாலிக் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாலேகானின் முன்னாள் மேயராக இருந்தவர் அப்துல் மாலிக். இவர் அசதுத்தீன் ஒவைசியின் கட்சியான ஆல் இந்தியா மஜ்லிஸ் -இ – இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் முக்கியத் தலைவராவார். இவர் நாசிக் பகுதியில் வைத்து மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்டு கிடந்த அப்துல் மாலிக்கினை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று பழைய ஆக்ரா சாலையில் உள்ள ஒரு கடைக்கு வெளியே மாலிக் அமர்ந்திருந்தபோது அதிகாலை 1:20 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அப்துல் மாலிக் மீது மூன்று ரவுண்டுகள் சுட்டதாக கூறப்படுகிறது.
அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு அனுமதிக்கப்பட்ட மாலிக்கின் உடல்நிலை சீராக இருப்பதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காவல்துறை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசதுத்தீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது..
“இந்த கொலை முயற்சி சம்பவம் மிகப்பெரும் சதி. மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். AIMIM கட்சியின் மாலேகான் தலைவரும் முன்னாள் மேயருமான அப்துல் மாலிக் நேற்று இரவு மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் சிகிச்சைக்காக நாசிக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். நான் அவரது சகோதரர் டாக்டர் காலித்துடன் தொலைபேசியில் பேசினேன். அப்துல் மாலிக்கின் குடும்பத்தினரிடம் தைரியமாக இருக்கும்படியும் நாங்கள் உறுதியாக் நிற்கிறோம் என தெரிவித்தேன். கொலையாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/ex-mayor-of-malegaon-abdul-malik-shot-at-nashik-stir.html