கரையை கடந்தது ரிமால் புயல் – 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..! 27 5 24
வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே ரிமால் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகத்தில் 9 துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 22-ம் தேதி நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து நேற்று மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் (மே 25) இரவு 7.30 மணிக்கு புயலாக வலுப்பெற்று, வங்கதேசத்தின் கேப்புப்பாரா என்ற பகுதியிலிருந்து சுமார் 360 கி.மீ. தெற்கு-தென்மேற்கேயும், மேற்கு வங்கம்- சாகர் தீவிலிருந்து 350 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இது 6 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து நேற்று காலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது. தொடர்ந்து, நேற்று இரவு 10.30 முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு 110 – 120 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 135 கிலோமீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியது.
ரிமால் புயலின் தாக்கத்தால் மேற்குவங்கத்தின் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும், சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளது.
AS PER INDIA METEOROLOGICAL DEPARTMENT FORECAST, THE SEVERE CYCLONIC STORM “REMAL” (PRONOUNCED AS “RE-MAL”) CROSSED THE BANGLADESH AND ADJOINING WEST BENGAL COASTS BETWEEN SAGAR ISLANDS AND KHEPUPARA CLOSE TO SOUTHWEST OF MONGLA NEAR LATITUDE 21.75°N AND LONGITUDE 89.2°E
— INDIA METEOROLOGICAL DEPARTMENT (@INDIAMETDEPT) MAY 27, 2024
இந்நிலையில் வடக்கு வங்கக்கடலில் உருவான ‘ரிமால் புயல்’ கரையை கடந்த நிலையில் 9 துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.