சனி, 25 மே, 2024

விளையாடும் போது, ஜிம் வொர்க் அவுட் செய்யும் போது திடீர் மாரடைப்பு: எப்படி தடுப்பது? மருத்துவர்கள் கூறுவது என்ன?

 

இன்றைய காலத்தில் இளம் வயதில் மாரடைப்பும், அதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் போதும், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போதும்  மாரடைப்பு ஏற்பட்டு மரணித்து விடுகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள பால்டியைச் சேர்ந்த 41 வயதான தொழிலதிபர், காலை ராஜ்பாத் கிளப்பில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து விட்டு வீடு திரும்பிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த 32 வயதான டாக்டர் திடீர் மரணம் அடைந்தார். இதேபோல், கடந்த நவம்பரில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண் டாக்டர் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த பிப்ரவரியில் பெங்களூரைச் சேர்ந்த 45 வயதான பிரபல சைக்கிள் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இப்படியாக இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட்ட உயிழந்தவர்களின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இது போன்ற சம்பவங்கள் தற்போது விளையாட்டு மற்றும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போதும் மற்றும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போதும் மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து ஆர்வலர்கள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது? என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? என சென்னையைச் சேர்ந்த பிரபல ஆயுர்வேத மருத்துவர் கௌதமனை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் நம்மிடம் பேசுகையில், "நாம் எல்லோரும் உடற்பயிற்சி செய்யும் போது அல்லது ஒரு விளையாட்டுக்கு என தயாராகும் போது, நாம் செய்யக்கூடிய ஆரம்ப உடற்பயிற்சிகள், நமது உடல் திறம்பட இயங்க உதவுகிறது. 

இன்றைய நவீன வாழ்கை முறையில், என்னதான் விளையாட்டு மருத்துவ நிபுணர்கள் நம்முடன் இருந்தாலும் கூட, நமக்கு இருக்கும் ஒரே பிரச்சனையாக நேரமின்மை இருக்கிறது. நேரமின்மையால் நமது தூக்கம், நாம் பருக வேண்டிய தண்ணீரின் அளவு, நமது திறனுக்கு மிஞ்சிய வேலை அல்லது விளையாட்டில் நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், நமது எடைக்கு ஏற்ப நாம் எடுத்துக் கொள்ளாத புரதம் சார்ந்த அமிலங்கள் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை சார்ந்த காரணிகள் இன்றைக்கு விளையாட்டு ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய அளவில் இதய நோயைக் கொண்டு வருகிறது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. 

விளையாட்டு துறை மேம்பட்டு இருந்தாலும், இதயம் சார்ந்த பரிசோதனைகளோ அல்லது உடற்தகுதி சார்ந்த மருத்துவ பரிசோதனைகளோ எடுக்க கூடிய விஷயத்தில், மிகப் பெரிய அளவில் கவனக் குறைவு இருக்கிறது. அதனால், விளையாட்டு வீரர்களோ அல்லது சர்க்கரையைக் குறைக்க விளையாட்டில் ஈடுபவர்களோ அல்லது வாரம் ஒரு முறை விளையாடும் மக்களோ, நம்மை பரிசோதித்துக் கொள்கிறோமா என்றால், நிச்சயம் இல்லை என்று கூறலாம். 

இப்போது நாம் கோடை மாதங்களில் இருக்கிறோம். இந்த நாட்களில் நாம் வெயிலில் விளையாடும் போது, நமக்கு தேவையான நீர்ச் சத்துக்களோ அல்லது உப்புச் சத்துக்களோ கிடைக்காமல் போனால், அது நிச்சயமாக நமக்கு மாரடைப்பை ஏற்படுத்துகிறது. அதனால், பல நேரங்களில் மரணமும் ஏற்படுதை நாம் பார்க்க முடிகிறது. 

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போதே ஏற்படும் மாரடைப்பை பொறுத்தவரையில், தடுப்பூசி போட்டுக் கொண்டதால் வரும் பக்க விளைவு என்று பார்க்கப்பட்டாலும் கூட, ஸ்லீப் அப்னியா (sleep apnea) என்று சொல்லக்கூடிய குறட்டை நோய் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்த ஆராய்ச்சில், ஜிம்மில் உயிரிழந்த 100 பேரில் 64 பேருக்கு  குறட்டை நோய் இருந்துள்ளதாக தெரிய வருகிறது. இந்த நோயைப் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் அவர்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருந்ததால், அவர்கள் உயிரிழந்துள்ளார்கள். 

இதய ஆரோக்கியம் என வரும் போது, எல்லோரும் கொழுப்புச் சத்தை மட்டும் பார்த்து, 'கொழுப்பான உணவுகளை நான் தவிர்க்கிறேன்' என்று சொல்லி 100 சதவீதம் கொழுப்பு உணவுகளை தவிர்ப்பவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுகின்ற ஆபத்து இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால், கொழுப்பு என்பது நமது உடலுக்கு மிகவும் அவசியமானது. 10 மில்லி கிராம் கொழுப்பு இல்லாமல் நமது இரத்த குழாய்களோ, இதய தசைகளோ இயங்கவே முடியாது. 

கொழுப்பற்ற உணவுகளுக்குள் நாம் போகும்போது, தேவையற்ற உடல் எடையை குறைக்கும் முயற்சிகள் அதிகமான அளவில் இருக்கும் போது, அதிகமான மனச்சுமை, உடல் எடையினால் ஸ்லீப் அப்னியா நோய் இருக்கும் போது, முறையாக அதை நாம் கவனிக்காமல் இருக்கும் போது நிச்சயமாக நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. 

இதய நோய் வருவதற்கான ஆபத்து காரணிகளைப் பொறுத்தவரையில், அதிகமாக வெளி உணவுகளை அல்லது எண்ணெய் பலகாரங்களை சாப்பிடக்கூடிய பெண்கள், குழந்தைகள் ஆகிய இருவரும் பெரிய அளவில் இதய நோயால் பாதிப்படைகிறார்கள். 40 - 50 வயதுடைய பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்று தெரியாதவர்களுக்கு இதய நோய் ஆபத்து இருக்கிறது. தைராய்டு நோய் இருந்து அதை முறையாக கட்டுப்பாடுத்தவர்களுக்கும், சர்க்கரை நோய் இருந்து முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும் இதய நோய் ஆபத்து உள்ளது. 

உடல் எடை அதிகமாக இருப்பதும், உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று தெரியாமல் இருப்பதும் இதய நோய்க்கான ஆபத்து காரணியாக இருக்கிறது. ஸ்லீப் அப்னியா என்கிற குறட்டை நோய் மற்றும் சொல்ல முடியாத அளவுக்கு ஏற்படுகின்ற மன அழுத்தம், அது குழந்தைகளாக இருந்தாலும் சரி, இளம் மற்றும் வயது முதிந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கும் இதய நோய் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இதை எல்லாத்தையும் விட மிக முக்கியமானதாக நுரையீரல் சார்ந்த தொற்றுக்கள் இருக்கிறது. குறிப்பாக நிமோனியா, டெங்கு ஏற்படும் போது முழுமையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு ஏற்படுகிறது. அனீமியா என்கிற ரத்த சோகையை நாம் முறையாக கவனிக்காமல் போனால் அதுவும் இதய நோயை ஏற்படுத்துகிறது. நம்முடைய இரத்த சொந்தங்கள் யாருக்காவது இதய நோய் இருந்தால், நம்முடைய இதயத்தை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 

புகைப் பழக்கமும், மதுப் பழக்கமும், போதைப் பழக்கமும், தூக்கம் இல்லாமல் அதிக நேரம் மொபைல் போன்களை பார்ப்பதும், இரவு தூக்கமில்லமால் இருப்பதும் கூட மாரடைப்பை ஏற்படுத்தும். அதீதமான அசைவ உணவுகள், கொழுப்பு சார்ந்த உணவுகள், இரவு நேரங்களில் அசைவு உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்பவர்களுக்கும் மாரடைப்பு ஆபத்து இருக்கிறது. 

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் உகந்த செயல்திறன், சீரான ஓய்வு, உணவு உட்கொள்ளுதல், தேவையான அளவு தண்ணீர் பருகுதல், வெறும் தண்ணீர் மட்டுமல்லாது சோடியம் பொட்டாசியம் சார்ந்த பானங்களை அருந்துதல் போன்றவற்றை நாம் அவசியம் கடைபிடிக்க வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக, 6 மாதத்திற்கு ஒருமுறை நம்முடைய மருத்துவரை சந்தித்து நமது உடலை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயங்களில் நாம் அதிக கவனம் எடுத்துக்கொண்டால், இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்." என்று அவர் கூறினார். 

source https://tamil.indianexpress.com/sports/sports-interested-people-and-gym-goers-how-can-prevent-cardiac-arrest-dr-gowthaman-tips-in-tamil-4603550