வெள்ளி, 17 மே, 2024

தீண்டாமை நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாது': மதுரை ஐகோர்ட் அதிரடி கருத்து!

 திண்டுக்கல் வெள்ளபொம்மன்பட்டி கிராமத்தில் வருகிற மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ள கோயில் திருவிழாவில் பட்டியலின மக்கள் வழிபாடும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கோரி சாமிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், வெள்ளபொம்மன்பட்டியில் உள்ள கோயில் விழாக்களில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 19-ல் நடைபெறவுள்ள கோயில் விழாவில் பட்டியலின மக்களும் வழிபட அனுமதி தர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அமர்வு முன் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளான பிறகும் சில பகுதிகளில்  தீண்டாமை  நடைபெறுவது, பாகுபாடு பார்ப்பது  ஏற்புடையதல்ல; சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது; அரசியலமைப்பை பாதுகாக்க நீதிமன்றம் உள்ளது” என்று கருத்து தெரிவித்தனர். 

இந்த வழக்கில், திருவிழாவின்போது எந்த பிரச்சனையும் ஏற்படாமல் வருவாய்த்துறை, போலீசார் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-bench-of-madras-high-court-on-untouchability-dindigul-vellabommanpatti-village-temple-festive-case-tamil-news-4580739