வெள்ளி, 17 மே, 2024

இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்': போதைப்பொருள் விற்பவர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

 தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்த இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறைச் செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண், போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி கமிஷனர் சங்கர் மற்றும் போதை தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

போதைப்பொருளை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரமும் தெரிவிக்ககப்பட்டது.விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் என அண்டை மாநில எல்லைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட இன்னும் அதிகமாக கண்காணித்து போதைப்பொருள் கடத்தி வருபவர்களை கைது செய்ய வேண்டும். துறைவாரியாக செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்" என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cm-mk-stalin-to-police-officials-about-drug-peddlers-tamil-news-4580514

Related Posts: