தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், சீர்காழி, சிதம்பரம் மற்றும் காரைக்கால் நகரங்களில் மேகதாட்டு அணைக்கு ஆதரவான ஆணையத்தின் தீர்மானத்தை தீயிட்டு எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமையேற்ற பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் நீராதார உரிமைகள் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் பறிபோய் கொண்டிருக்கிறது. அதனை தடுத்து நிறுத்த தமிழக முதலமைச்சர் முன்வரவில்லை. சட்ட நடவடிக்கைகளை விரைவு படுத்தவில்லை.
குறிப்பாக சிறுவாணி குறுக்கே 2015 முதல் தடுத்து நிறுத்தி வைத்திருந்த அணை கட்டுமானம், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக கேரளா அரசு கட்டி முடித்துள்ளது.
மேலும், அமராவதி அணைக்கு வரக்கூடிய முக்கிய ஆறான சிலந்தி ஆற்றின் குறுக்கு தற்போது அணைக்கட்டுமான பணியை கேரளம் துவக்கி உள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசு மூடி மறைக்க முயற்சிக்கிறது.
பாலாறு குறுக்கே ஆந்திர அரசு தொடர்ந்து அணைகளை கட்டி வருகிறது. இதனையும் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு முன்வரவில்லை.
இந்நிலையில் 50 ஆண்டு காலம் போராடி பெற்ற காவிரி உரிமை தி.மு.க ஆட்சியில் பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என ஆணைய தலைவர் தெரிவிக்கிறார். இதனை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழ்நாடு அரசு தட்டிக் கேட்க தயங்குகிறது. தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் புறக்கணிக்கிறது.
இதனை கண்டித்தும், இன்று நடைபெற உள்ள 30வது ஆணைய கூட்டத்தில் தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை தீயிட்டு கொளுத்தி காவிரி டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.
மேகதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்திற்கு துணை போன தமிழ்நாடு அரசின் நீர்ப்பாசன துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனாவை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
வரும் 25ஆம் தேதி கோவையில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் ஒன்று கூடி தமிழ்நாடு நீராதார உரிமைகள் பறிபோவதை தடுத்து நிறுத்துவதற்கு எதிரான போராட்டக் களத்தை தீவிர படுத்தவும், தமிழ்நாடு அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தில் களமிறங்கவும் தீர்மானிக்க உள்ளோம் என்றார்.
போராட்டத்தில் எல் பழனியப்பன், எம்.செந்தில்குமார், எம்.மணி, பி.அறிவு, பு காமராஜ், திருப்பதி, பாட்ச்சா ரவி மகேஸ்வரன் பத்மநாபன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-delta-farmer-protest-against-mekedatu-dam-resolution-4594309