செவ்வாய், 16 ஜூலை, 2024

காவிரி விவகாரம் – தமிழ்நாட்டில் இன்று அனைத்து சட்டமன்ற கட்சிக் கூட்டம்!

 

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசின் முடிவிற்கு எதிராக இன்று தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு அளித்த உத்தரவு குறித்தும், இந்த உத்தரவுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியத்தில் மேல் முறையீடு செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.  இறுதியில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடிவு எடுக்கப்பட்டது.  மேலும் ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக அரசின் முடிவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது எனத் தெரிவித்தார். மேலும் இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு CWMA அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், IMD யின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், CWRC அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகனின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை இன்று (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன். இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.” இவ்வாறு முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று காலை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

source https://news7tamil.live/cauvery-issue-all-assembly-party-meeting-in-tamil-nadu-today.html