புதன், 17 ஜூலை, 2024

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவு வரவேற்கத்தக்கது; பந்த் ஒத்திவைப்பு - பி.ஆர்.பாண்டியன்

 16 7 24 

PR Pandian Thanjavur

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் திருப்பதி வாண்டையார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று விவசாயிகளுக்கான பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தார். அமைப்பு செயலாளர் எஸ் ஸ்ரீதர் உயர் மட்டக்குழு உறுப்பினர் தஞ்சை என்.அண்ணாதுரை விவசாயிகள் சங்கத் தலைவர்கள் திருமண்டங்குடி முருகேசன், ஏ.கே.ஆர் ரவிச்சந்தர், ஆரு.சி தங்கராசு, எம்.ஜீவரத்தினம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் கூட்ட முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பி.ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது: காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தி எடுத்திருக்கிற முடிவுகளை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. கர்நாடக அரசுக்கு எதிராக அவசர வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்வது மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அவசர கடிதம் எழுதி உரிய தண்ணீரை பெற்றுத்தர வலியுறுத்துவது உட்பட தீர்மானங்களை வரவேற்கிறோம்.

இதனை அடுத்து வரும் ஜூலை 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த முழு அடைப்பு, சாலை, ரயில் மறியல் பந்த் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இப்போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவளித்திருந்தது. அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுகிறோம். 

காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீரை பெற்றுக் கொடுக்கிற அதிகாரமிக்க அமைப்பாகும். தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி வீதம் 18 டி.எம்.சி தண்ணீர் பெறுவதற்கான முதல் கட்ட உத்தரவு காவிரி டெல்டாவில் ஒருபோக சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இல்லை. ஜூன்  மற்றும் ஜூலை மாதத்திற்கான 44 டி.எம்.சி தண்ணீரையும் சேர்த்து பெறுவதற்கான உத்தரவை மேலாண்மை ஆணையம் பெற்று தர வேண்டும். அதற்கான முறையீட்டை தமிழ்நாடு அரசு செய்திட வேண்டும். 

காவிரி மேலாண்மை ஆணையம் உதவி கோரும் பட்சத்தில் மத்திய அரசு தலையிட்டு தண்ணீரை விடுவிக்க முன்வர வேண்டும். ஆணையம் மறுக்கும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் ஆணையத்தின் மீது வழக்கு தொடர வேண்டும். காரணம் காவிரி ஆறு, அணைகள் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பராமரிப்பில் உள்ளது. ஆறுகளில் வரக்கூடிய தண்ணீரும், அணைகளில் உள்ள தண்ணீரும் ஆணையத்தின் நீர் நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க கர்நாடக அரசு போடும் தீர்மானம் செல்லுபடியாகாது. மாறாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். எனவே ஆணையம் எடுக்கும் முடிவை நிறைவேற்றுகிற பொறுப்பும் ஆணையத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை உணர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் கள் இறக்கி விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பிரச்சனைக்கு பிறகு விவசாயிகள் மீது சமூக விரோதிகளுக்கு இணையான வகையில் வழக்கு போட்டு சிறையில் அடைக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கள் மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருளாகும். வேளாண் உணவுப் பொருட்களை குமரி முதல் காஷ்மீர் வரை தடையில்லாமல் விற்பனை செய்து கொள்வதற்கும் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், கள்ளுக்கு தமிழ்நாடு அரசு வழக்கு போடுவது சட்ட விரோதமாகும். கேரளாவில் விற்பனைக்கு அனுமதிக்கும் போது தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் கள்ளை கேரளாவில் விற்பனை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாட்டில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விற்பனைக்கு பொது வினியோக திட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 30 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்தோம். பல்வேறு நெருக்கடிகளால் மாற்றம் செய்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றார்.

முன்னதாக, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக செந்தில்குமார், தெற்கு மாவட்ட தலைவராக ஊரணிபுரம் ரவிச்சந்திரன், ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளராக பிரபாகரன், தலைவராக ரகுநாதன், பொருளாளராக ஞானசேகரன், கௌரவ தலைவராக கனகராஜ், அம்மாபேட்டை ஒன்றிய தலைவராக கார்மேகராஜ், செயலாளராக பெரியண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநில இளைஞரணி செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன், தென்னங்குடி ராஜேந்திரன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் பெருமகளூர் ஜெயச்சந்திரன், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் அருள்சாமி, பட்டுக்கோட்டை நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் மாணிக்கவாசகம், செய்தி தொடர்பாளர் என். மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-farmer-association-welcomes-all-party-meeting-decision-on-cauvery-issue-6144903