வியாழன், 12 செப்டம்பர், 2024

160.8 ஏக்கர் 21 ஏக்கராக சுருங்கியது எப்படி? | #MadrasRaceClubல் என்ன தான் நடக்கிறது?

 11 9 24

How did 160.8 acres of land shrink to 21 acres? - What's happening at #MadrasRaceClub?

சென்னை ரேஸ் கிளப்பிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலம் பெரும்பாலான நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் என்ன தான் நடக்கிறது என்பது குறித்து விரிவாக காணலாம்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? நிச்சயமாக மறைக்க முடியும் என நிரூபித்திருக்கிறது சென்னை ரேஸ் கிளப் விவகாரம்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வசதி படைத்த பணக்காரர்கள் குதிரைகள் மீது பெரிய தொகையை வைத்து பந்தயம் கட்டி விளையாடுவதற்காக மாநகரின் மையப்பகுதியில் சுமார் 160 ஏக்கர் நிலம் மெட்ராஸ் ரேஸ் கிளப்க்கு வழங்கப்பட்டது.

இதன் பின்னர் சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு, கடந்த 1945 ஆம் ஆண்டு 160 ஏக்கர் 86 சென்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அப்போதைய அரசு வழங்கியது. இந்த குத்தகைக் காலம் வரும் 2044 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சென்னையின் மையப்பகுதியில் உள்ள இந்த நிலம் அடையாறு, வேளச்சேரி மற்றும் கிண்டி ஆகிய தாலுகாக்களில் பரவியுள்ளது.

இந்த நிலத்திற்கான வாடகை எவ்வளவு தெரியுமா? அதனை கேள்விப்பட்டால் நீங்கள் புருவம் உயர்த்தி ஆச்சர்யத்தோடும், அதிர்ச்சியாகவும் பார்ப்பீர்கள்..

ரேஸ் கிளப்பிற்கான நிலத்தை குத்தகைக்கு விடும் போது ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி முதல் வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி மாம்பலம் – கிண்டி வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு பதிலளித்த மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம், வாடகையை உயர்த்துவது தொடர்பாக கடந்த 1945-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் எந்தப் பிரிவும் சேர்க்கப்படவில்லை என வாடகையை உயர்த்தி தர மறுத்தது.

இதை ஏற்க மறுத்த தமிழ்நாடு அரசு, 1970 ஆம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு வாடகை பாக்கித் தொகையாக ரூ.730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை செலுத்தும்படி உத்தரவிட்டது. இதற்கு விளக்கம் அளித்த ரேஸ் கிளப் நிர்வாகம் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக நாங்கள் ஏன் வாடகை செலுத்த வேண்டும் கறாராக மறுத்துவிட்டது. எனவே வாடகை பாக்கியை செலுத்தாததால் ரேஸ் கிளப்பிற்கு சீல் தமிழ்நாடு அரசு தற்போது சீல் வைத்துள்ளது.

160 ஏக்கர் நிலத்தில் தற்போது ரேஸ் கோர்ஸ் கிளப் 21 ஏக்கராக சுருங்கிவிட்டது. இந்த 21 ஏக்கரில், 12 ஏக்கர் நிலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் (SDAT) கீழ் நீர்வாழ் உயிரினங்களின் வளாகத்திற்காக 4.9 ஏக்கர் கையகப்படுத்தப்பட்ட நிலையில், 3.86 ஏக்கர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு (TNSCB) வழங்கப்பட்டது. இதேபோல 3.78 ஏக்கர் பொது சாலைகளுக்காக வழங்கப்பட்டது. இவற்றில் மீதி 9 ஏக்கர் எங்கே போனது? என்கிற கேள்வி எழுகிறது.

இந்த பகுதியில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வாங்க வேண்டும் எனில் அவற்றின் விலை குறைந்தது ரூ.1.5 கோடியாகும். இவ்வளவு மதிப்புள்ள பகுதியில் 9 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனச் சொல்வதை எப்படி ஏற்க முடியும்?

ரேஸ் கோர்ஸ் நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் உள் வாடகைக்கு விட்டு பெரும் தொகையை சம்பாதித்து வருகிறது. எனவே, இந்த நிலத்தை மீட்டு தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் வளர்ச்சித் திட்டங்களுக்காக பொதுநல நோக்கில் பயன்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.



source https://news7tamil.live/how-did-160-8-acres-of-land-shrink-to-21-acres-whats-happening-at-madrasraceclub.html