ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தோ்தல்: பணிகளை தொடங்கிய மாநிலத் தோ்தல் ஆணையம்

 Tamilnadu Local body election, Tamilnadu Election commission, Madras high court

TN Local Body Elections 2024

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு தோ்தலுக்காக வாக்குப் பெட்டிகளைத் தயார் நிலையில் வைக்குமாறு மாவட்டத் தோ்தல் அலுவலா்களுக்கு மாநிலத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வார்டு மறுவரையறை முடிந்த பின், கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சியில் மீதமுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இந்தாண்டு டிசம்பர் மாதம், முதலில் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. மீதமுள்ள 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் 2026ல் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளான, மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எழுதியுள்ள கடித்தில் கூறியிருப்பதாவது;

’ஊரக உள்ளாட்சிகளின் சாதார தேர்தலுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார்நிலையில் வைப்பது அவசியமாகிறது. இதில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை தயார் நியையில் வைக்க வேண்டும்.

எனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்குப்பெட்டிகளின் தற்போதைய தரம் மற்றும் நிலையை, இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச்சென்று ஆய்வு செய்து, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் அவற்றில் சிறிதளவு பழுதடைந்தவை, முழுமையாக பழுத்தடைந்தவற்றை தரம் பிரித்து வைக்க வேண்டும்.

சிறிய பழுதுகளை சரி செய்ய பெட்டி ஒன்றுக்கு ரூ.21 வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி அவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-local-body-elections-in-27-districts-tamilnadu-election-commission-7049725