மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகள், அரசு அதிகாரிகள் மூலம் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட தனிநபரின் வீடுகள் மற்றும் உடைமைகளை சரியான காரணமின்றி வழிமுறைகளை பின்பற்றாமல் புல்டோசர் கொண்டு இடிப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கிற்கு நீதிபதிகள் பி.ஆர். காவை மற்றும் கே.வி. விஷ்வநாதன் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, “குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை குற்றவாளிகள் என அரசு அதிகாரிகள் முடிவு செய்து அவர்களை தண்டிக்க முடியாது. தனிப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் சொத்துகளை முறையாக காரணங்களின்றி இடித்தல், வரம்புமீறி செயல்படுவது போன்றது“ என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், “இது போன்ற நடவடிக்கைளை கையில் எடுக்கும் அரசு அதிகாரிகள் தான், சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். அரசு அதிகாரிகள் தன்னிச்சையாகவும் பாரபட்சமாகவும் நடந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் சொத்துகளை அகற்ற வேண்டுமென்றால் அதற்கு உரிய வழிமுறைகள் பின்பற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தண்டனை பெற்ற குற்றவாளிகள் கூட தங்கள் சொத்துகளை பாதுகாக்க சட்டப்பூர்வ நடவடிக்கை உள்ளதாக நீதிபதிகள் அமர்வு கூறியிருந்தது.
முன்னதாக, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர்களின் வீடுகள் அதிகாரிகளால் இடிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/supreme-court-bulldozer-justice-verdict-7577252