source https://tamil.indianexpress.com/tamilnadu/kanyakumari-new-150-seater-tourist-boat-12803816
/indian-express-tamil/media/media_files/2026/11/12/kamaraj-2026-11-12-16-12-30.jpg)
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை பார்க்க ஏராளமான மக்கள் தினமும் குவிந்து வருகின்றனர். தி.மு.க ஆட்சியில் விவேகானந்தா மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையும் இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது. இதையடுத்து, கன்னியாகுமரிக்கு பல மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
கண்ணாடி பாலம் திறக்கப்பட்ட பிறகு பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், போதிய படகு வசதிகள் இல்லாததால் படகுத் துறையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கூடுதல் படகு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த தி.மு.க ஆட்சியில் புதிய அதிநவீன சுற்றுலா படகு வாங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கோவாவில் 156 இருக்கைகள் கொண்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய படகு கட்டப்பட்டு கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த படகிற்கு 'பெருந்தலைவர் காமராஜர்' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை வழித்தடத்தில் 'பெருந்தலைவர் காமராஜர்' படகின் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. மேலும், அப்படகு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் காத்திருப்பு நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





