source https://tamil.indianexpress.com/tamilnadu/tnreginet-online-document-registration-process-without-middlemen-12802709
இச்சேவையைப் பயன்படுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள், முதலில் பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnreginet.gov.in என்பதில் தங்களுக்குரிய பயனர் கணக்கை (Login) உருவாக்கி உள்நுழைய வேண்டும். இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள 'ஆவணப்பதிவு' என்ற பகுதியைத் தேர்ந்தெடுத்தவுடன், திரையில் தோன்றும் அடுத்த பக்கத்தில் 'இங்கே சொடுக்கவும்' (Click Here) என்ற இணைப்பை அழுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து, விற்பனை, தான செட்டில்மெண்ட் அல்லது பாகப்பிரிவினை போன்ற தங்களுக்குத் தேவையான ஆவண வகையைத் தேர்வு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.
ஆவண வகையைத் தேர்ந்தெடுத்த பிறகு, சொத்து விற்பவர், வாங்குபவர் மற்றும் சாட்சிகளின் முழு விவரங்களுடன் சொத்து தொடர்பான தகவல்களையும் பிழையின்றி உள்ளீடு செய்து சமர்ப்பிக்க வேண்டும். தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், விண்ணப்பதாரருக்குத் தற்காலிகப் பதிவு எண்ணான 'டி.பி எண்' உடனடியாக வழங்கப்படும். இதன் தொடர்ச்சியாக, உருவாக்கப்பட்ட ஆவணத்தின் மாதிரியை 'எனது ஆவணங்கள்' பகுதியில் பார்வையிட்டு, அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்து பி.டி.எஃப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர், இணையவழியிலேயே 'செலுத்துக' என்ற வசதியைப் பயன்படுத்தி உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்திய பிறகு, காகிதமில்லா ஆவணப் பதிவிற்கான 'வரைவு ஆவணச்சுருக்கம்' என்பதைத் தேர்ந்தெடுத்து, ஏற்கனவே வழங்கப்பட்ட டி.பி எண்ணை உள்ளீடு செய்து இறுதித் தகவல்களை உருவாக்க வேண்டும். அடுத்ததாக, ஆன்லைனில் ஒருமுறை கடவுச்சொல் மூலம் மின்னணு கையொப்பம் இட்டு, தங்களுக்கு வசதியான நாள் மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து முன்பதிவு வில்லையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இறுதிக்கட்டமாக, முன்பதிவு வில்லையில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகள் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு சார்பதிவாளர் விண்ணப்பதாரர்களின் அடையாளச் சான்றுகளைச் சரிபார்த்து, இந்திய முத்திரைச் சட்டம் 1899 மற்றும் பதிவுச் சட்டம் 1908 ஆகியவற்றின் விதிகளுக்கு உட்பட்டுப் பணிகளை மேற்கொள்வார். கைரேகை அல்லது விழித்திரை மூலம் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் பெறப்பட்டதும், சார்பதிவாளர் தனது மின்னணு கையொப்பத்தை இடுவார். இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட இறுதி ஆவணம், விண்ணப்பதாரரின் இணையதளக் கணக்கிற்கே நேரடியாக அனுப்பி வைக்கப்படும் எனப் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.





