வியாழன், 12 நவம்பர், 2026

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள்: புதுச்சேரி அரசு குறித்து தி.மு.க எம்.எல்.ஏ ஆவேசம்

 

Puduchery DMK

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை என்றால் ஆட்சியாளர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தினமும் நடைபெற்று வரும் கொலைகளால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளதாகவும், இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய ஆளுநர் முதலமைச்சர், அமைச்சர் ஆகியோர் பொறுப்புகளை தட்டிக் கழிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்பாக அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ-விக்னேஷ் கண்ணன், புதுச்சேரியில் சமீப காலமாக ஏகப்பட்ட கொலைகள் நடந்தேறி வருகிறது, ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொலை என மாதத்தில் 10 கொலைகளுக்கு மேலாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார். 

தினந்தோறும் கொலைகள் நடந்து வந்தாலும் ஆனால் அரசு புதுச்சேரி அமைதியாக இருப்பதாக கூறி ஒரு பொய்யான பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது, ஆனால் காவல்துறை தலைவரும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள், கொலைகளை தடுப்பதற்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர் காவல்துறையின் மெத்தன போக்காலே இது போன்ற கொலைகள் நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற தொடர் கொலைகள் நிகழாது என்று கூறிய விக்னேஷ் கண்ணன்.. காவல்துறை மீதும், புதுச்சேரி அரசு மீதும் பயம் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். புதுச்சேரியில் நடக்கும் குற்றங்கள் மீது காவல் நிலையம் சென்று புகார் அளித்தால் அதன் மீது வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர் இரு தரப்பையும் அழைத்து பஞ்சாயத்து செய்து வருவதாக கூறிய விக்னேஷ் கண்ணன் வழக்கு பதிவு செய்யக்கூட ஆளுநர் முதல்வர் அமைச்சர் மற்றும் அமைச்சரின் பி.ஏ. போன்றவர்களின் சிபாரிசு இருந்தால் தான் போலீசார் வழக்கு பதிவு செய்வதாகவும் கடுமையாக விமர்சித்தார். 

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரே காவல் நிலையத்தில் அமைந்து போராட்டம் நடத்தக்கூடிய சூழல் தான் தற்போது நிலவி வருவதாகவும், எனவே மேலும் தாமதிக்காமல் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உடனடியாக தலையிட்டு சட்ட ஒழுங்கு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை என்றால் எதற்காக ஒரு அரசாங்கம் என்று கேள்வி எழுப்பிய அவர் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் ஆட்சியில் உள்ள அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி


source https://tamil.indianexpress.com/puducherry/puducherry-dmk-mla-vignesh-said-about-nr-congress-12799338