சனி, 14 நவம்பர், 2026

சொந்த ஊரிலேயே வசித்தும் வேறு தொகுதிக்கு மாறிய ஓட்டு: புனே வாக்காளர் பட்டியலில் நடந்த மெகா குளறுபடி

 source https://tamil.indianexpress.com/india/maharashtra-voter-list-deletion-election-commission-form-8-misuse-bhosari-assembly-voter-fraud-12808016


மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில், வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தை விட்டு எங்கும் மாறாத நிலையிலும், அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயர்கள் வேறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாற்றப்பட்டு நீக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் ஆய்வு செய்த அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலம் இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2024 அக்டோபரில், அப்போதைய புனே மாவட்டத் தேர்தல் அதிகாரி சுஹாஸ் திவாசே, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ். சொக்கலிங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், புனேவின் பல்வேறு தொகுதிகளிலிருந்து வாக்காளர்களின் முகவரிகளை மாற்றக் கோரி (படிவம் 8) அதிகளவில் விண்ணப்பங்கள் வருவதாகத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயரே இல்லாத ஒரே மின்சாரக் கட்டண ரசீதை ஆவணமாகக் கொண்டும், ஒரே கணினி முகவரியிலிருந்தும் (IP Address) மொத்தமாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதாக அவர் சந்தேகம் எழுப்பியிருந்தார்.

அதைத் தொடர்ந்து 2025 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், புதிய மாவட்டத் தேர்தல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஜிதேந்திர துடி அடுத்தடுத்து இரண்டு கடிதங்களை எழுதினார். நேரடி கள ஆய்வில், முகவரி மாற்றம் கோரப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்களது பழைய வீடுகளிலேயே வசித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், 2026 ஜனவரியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இத்தகைய போலி விண்ணப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்திருந்தார்.

ஆங்கிலத்தில் வாசிக்க

இந்நிலையில், 2025 நவம்பர் 19 அன்று தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) தலைவர் அஜித் கவ்கானே, போசாரி (Bhosari) தொகுதியிலிருந்து முறைகேடாக நீக்கப்பட்ட 58 வாக்காளர்களின் பட்டியலுடன் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் நேரில் புகார் அளித்தார்.

"இந்த 58 வாக்காளர்களும் போசாரி (Bhosari) சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் நிரந்தரமாக வசிப்பவர்கள் மேற்கூறிய வாக்காளர் பட்டியலிலிருந்து தங்கள் பெயர்களை மாற்றவோ அல்லது நீக்கவோ எந்த விண்ணப்பத்தையும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை. குறிப்பாக இந்தப் பட்டியலில் உள்ள 58 பேரில் 51 பேர் இஸ்லாமியர்கள் ஆவர். இது ஒரு சிறிய மாதிரி மட்டுமே என்றும், இதுபோல் 15,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் குற்றம் சாட்டினார்.

2024 மாநில சட்டமன்றத் தேர்தலில் போசாரி தொகுதியில் என்.சி.பி (சரத் பவார்) சார்பில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களிடம் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பேசியபோது, குறைந்தது ஆறு பேர் தாங்கள் வீடு மாறவும் இல்லை, எந்த விண்ணப்பத்தையும் அளிக்கவும் இல்லை எனத் தெரிவித்தனர்.

பாத்திமாபி மெகபூப் சையத், "நான் முகவரி மாற்றத்திற்கு எந்த விண்ணப்பமும் அளிக்கவில்லை. ஆனால் எனது வாக்காளர் முகவரி தானே மாவட்டத்தில் உள்ள ஓவலா மஜிவாடா தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது" என்றார்.

இந்த ஆண்டு நடைபெற்ற பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சித் தேர்தலில் வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா வேட்பாளராகப் போட்டியிட்ட சலார் ஷேக், 

"எனது பெயர் அண்டை தொகுதியான பிம்ப்ரிக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர் எனது படிவத்தை நிரப்ப மறுத்ததால், வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்தே எனது பெயர் நீக்கப்பட்டுவிட்டது. தற்போது மீண்டும் பெயரைச் சேர்க்க படிவம் 6 விண்ணப்பித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

கள ஆய்வு இன்றி ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள்

தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்ட விசாரணையில், தானே, கேட் அலந்தி, அம்பேகான், கடக்வாஸ்லா, நாசிக் கிழக்கு, போசாரி, கோத்ருட் மற்றும் பிம்ப்ரி ஆகிய 8 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர். இதில் பிம்ப்ரி, தானே மற்றும் கடக்வாஸ்லா ஆகிய தொகுதிகளின் அதிகாரிகள், நேரமின்மை காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் நேரடி கள ஆய்வு இல்லாமலேயே, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மட்டும் முகவரி மாற்ற விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் (ERONET) விதிப்படி, புதிய தொகுதியில் முகவரி மாற்றம் ஏற்கப்பட்டவுடன், பழைய தொகுதியிலிருந்து அந்த வாக்காளரின் பெயரை நீக்குவதற்கான படிவம் 7 தானாகவே உருவாகிவிடும். அதனைப் பழைய தொகுதி அதிகாரி நிராகரிக்கும் வசதி மென்பொருளில் இல்லை.

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் இது குறித்துக் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, 2026 அக்டோபர் 31 அன்று புனே மாவட்டத் தேர்தல் அதிகாரி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். கள ஆய்வின்றி விண்ணப்பங்களை ஏற்ற பிம்ப்ரி தேர்தல் பதிவு அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 4 செல்போன் எண்களைப் பயன்படுத்தி 40 போலி விண்ணப்பங்களைப் பதிவு செய்த நபர்கள் மீது நவம்பர் 1-ம் தேதி நிக்டி காவல் நிலையத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் அளிக்கப்பட்ட 58 பேரில் 3 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 11 பேர் பழைய முகவரியிலேயே உள்ளதாகவும், மீதமுள்ள 43 பேரை மீண்டும் போசாரி தொகுதியில் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ். சொக்கலிங்கம் கூறுகையில், பழைய தொகுதியில் பெயர் நீக்கத்தை நிராகரிக்கும் வசதி வழங்கப்பட்டால், ஒரே வாக்காளர் இரண்டு தொகுதிகளில் இடம்பெறும் நிலை ஏற்படும் என்றார். இருப்பினும், இதுபோன்ற மொத்தமாகப் போலி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதைத் தடுக்க, 2025 செப்டம்பர் முதல் ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் கையொப்பம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.