சனி, 14 நவம்பர், 2026

மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது':

 source https://tamil.indianexpress.com/india/karnataka-cm-dk-shivakumar-mekedatu-dam-pm-modi-tamil-news-12807277


Karnataka CM DK Shivakumar Mekedatu dam PM Modi Tamil News

"மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு சட்டரீதியாக உதவ வேண்டும்." என்று மைசூருவில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார். 

கர்நாடக மாநிலம் மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விண்வெளி மற்றும் நவீன ஒளியியல் அறிவியல் மையத்தின் (CoSMOS) தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், மேகதாது அணைத் திட்டத்துக்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும், மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரிரங்கன் அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும், அரசு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) விதிகளை கர்நாடக அரசின் வழிகாட்டுதல்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். 

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக கர்நாடகாவில் உருவாகும் காவிரி நதி இருந்து வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இந்த முயற்சிக்கு தமிழ்நாடு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழக விவசாயிகள், அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை தினந்தோறும் பதிவு செய்து வருகிறார்கள். தமிழக அரசு சார்பிலும் காவிரிக்கு குறுக்கே அணை கட்டு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் 19, 2026 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்வில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், கஸ்தூரிரங்கன் அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், தெளிவான தீர்ப்பை அளித்து விட்டது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டே தீரும். 

இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. சட்ட ரீதியாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல்களை மத்திய அரசு தரவேண்டும்.இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம். அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கர்நாடகாவுக்கு உதவ வேண்டும்." என்று கூறியுள்ளார்.