வெள்ளி, 13 நவம்பர், 2026

அப்படியே விட்டால் இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும்:

 source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-ammk-ttv-dinakaran-press-meet-about-vijay-and-tvk-government-12804762


Tamilnadu AMMk TTV Dinakaran Press Meet About Vijay and TVK Government

விஜய்க்கு புரட்சித்தலைவருடன் ஒப்பிடும் தகுதி இல்லை; சினிமாவில் ஹீரோவாக நடித்த விஜய், நிஜத்தில் வில்லன் என அவரே கூறியுள்ளார் – டிடிவி தினகரன் கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், திராவிட ஆட்சிகளின் கீழ் இந்தியாவின் முக்கிய வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்கி வந்தது. திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்த காலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், மக்கள் மாற்றத்தை விரும்பியதால் தற்போதைய ஆட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 

இதன் காரணமாக சிறந்த மாநிலமாக விளங்கிய தமிழ்நாடு தற்போது சினிமா மாநிலமாக மாறியிருக்கிறது. இளைஞர்களும் இளம் பெண்களும் சினிமா கதாநாயகன் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் வாக்களித்துள்ளனர் என்றார். மேலும், தவெக ஆட்சியில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் குறித்துப் பேசிய அவர், திரைப்படங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்கள், வேறு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

புரட்சித்தலைவருடன் விஜய்யை ஒப்பிடுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. சினிமாவில் கதாநாயகனாக நடித்த விஜய், நிஜத்தில் வில்லன் என்பதைத் தேர்தலுக்கு முன்பே அவரே கூறியுள்ளார். அனைத்து தொகுதிகளிலும் நானே போட்டியிடுகிறேன் என்று கூறிய நிலையில், தற்போது அமைச்சர்களில் யாராவது ஒருவராவது சுதந்திரமாகச் செயல்படுகிறார்களா எனக் கேள்வி எழுப்பினார்.

த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக வெளியாகும் சர்ச்சைச் செய்திகள் குறித்துப் பேசிய அவர், துணை சபாநாயகர் பொறுப்பில் இருப்பவர் யாரையாவது அடித்ததாகச் செய்திகள் வருவது வெட்கப்பட வேண்டிய நிலை. கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மாவட்ட ஆட்சியருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரைச் சந்திக்க முயன்றதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று குற்றம்சாட்டினார்.

கள்ளக்குறிச்சியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது ஊடகங்களைக்கூட மாவட்ட ஆட்சியர் அழைக்கவில்லை என்றும் தெரிவித்தார். விஜய் முதலமைச்சரான பிறகு மற்ற நடிகர்களுக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கலாம். அது அவர்களுடைய ஜனநாயக உரிமை. ஆனால், அசாமில் அடிப்படை இல்லாமல் ஒரு கட்சி ஆட்சி அமைத்தபோது அதன் நிலை என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதைய அரசியல் சூழலில் தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டுள்ளது என்றும் விமர்சித்தார்.

கூட்டணி மற்றும் இடைத்தேர்தல் குறித்து:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் தொடர்ந்து இருப்பதாகத் தெரிவித்த டிடிவி தினகரன், இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதுதான் நியாயமாக இருக்கும். ஜெயலலிதா ஆட்சி அமைக்க அதிமுகவிற்கு உறுதுணையாக இருப்போம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களது ஆதங்கங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துவதைவிட, கட்சித் தலைமையிடம் தெரிவிப்பதே சரியானதாக இருக்கும் என்றும் கூறினார்.

சண்டியர் திரைப்படப் பெயர் குறித்த கேள்விக்கு:

சண்டியர் என்ற திரைப்படத்தின் பெயருக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கிருஷ்ணசாமி எனது நண்பர்தான். தற்போது அதுகுறித்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை. தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் அண்ணன், தம்பிகளாகச் சமமாக வாழ்ந்து வருகின்றனர் என்றார்.

பெரியார் அறிவுலகம் விவகாரம்:

பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் இதுபோன்ற ஊழல் நடைபெற்றிருக்கக் கூடாது என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். முதலமைச்சரின் மௌனம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆட்சிக்கு வருவோம் என்று அவரே நினைத்திருக்க மாட்டார். எதுவும் இல்லாததால் கையை மூடி வைத்திருக்கிறார் என்று விமர்சித்தார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த கேள்விக்கு:

இந்த ஆட்சியை அப்படியே விட்டால் தானாகவே கவிழ்ந்துவிடும் என்று பதிலளித்தார். மேலும், பிரதமர் மோடி குஜராத்தில் சிறந்த ஆட்சியை வழங்கியதன் மூலம் நாடு முழுவதும் புகழ்பெற்றார். ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருகிறார். ஆனால், விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். தமிழ்நாடு தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.