/indian-express-tamil/media/media_files/2026/10/30/sir-electoral-roll-deadline-supreme-court-voter-list-extension-2026-10-30-07-34-26.jpg)
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு வாய்ப்பு: பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கோரிக்கை
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை முன்னிட்டு, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியானது: சென்னையில் மாநகராட்சி ஆணையர் சமீரன் சிறப்பு சுருக்கத் திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மற்ற மாவட்டங்களில் ஆட்சியர்கள் வெளியிட்டனர்.
சென்னையில், எஸ்.ஐ.ஆர்-க்குப் பின் சுமார் 84,000 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டு, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 29,14,908 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஆண் வாக்காளர்கள் 14,04,968 பேரும், பெண் வாக்காளர்கள் 15,09,040 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 900 பேரும் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் இருப்பதாகத் தேர்தல் அதிகாரி சமீரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி 23, 2026 அன்று வெளியிடப்பட்டது. மார்ச் 15, 2026 நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 69 லட்சத்து 17 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.78 கோடியும், பெண் வாக்காளர்கள் 2.90 கோடியும், மூன்றாம் பாலினத்தவர் 7,656 பேரும் அடங்குவர். இவர்களைத் தொடர்ந்து, புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் (SIR) வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து கடந்த சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் (SSR) தற்போது தொடங்கப்பட உள்ளன. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வரும் ஜனவரி 1, 2027-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு இந்த திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளைத் திருத்தி அமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் பணிகள் கடந்த 2-ம் தேதியுடன் நிறைவடைந்து, புதிய வாக்குச்சாவடிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது. இதன் தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியானது.
வாக்காளர்கள் கவனத்திற்கு:
வரைவுப் பட்டியல் வெளியானதும், வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா மற்றும் விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் புதிதாகப் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் மற்றும் பெயர் நீக்குதல் போன்ற திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக வரும் டிசம்பர் 11-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு டிசம்பர் 28-ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/draft-voter-list-tamil-nadu-release-election-commission-archana-patnaik-ias-12802827





