செவ்வாய், 1 டிசம்பர், 2015

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே அனைத்து துறை அதிகாரிகளும் எனது ஆணையின் பேரில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், ஒரு சில தினங்களில் மிக அதிக அளவு மழைப் பொழிவு ஏற்பட்டதால், சில மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுவை நான் அனுப்பி வைத்தேன். இதன் அடிப்படையில், மழையால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் துரிதமாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று (30.11.2015) இரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இன்றும் (1.12.2015) கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மாநிலத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, 7.12.2015 அன்று முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைத்திட நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த தேர்வுகள் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.