ஞாயிறு, 27 டிசம்பர், 2015

ரஜினி - அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரும் அவரது ரசிகனுக்கும், -சகாயம் முதல்வராகவேண்டும் என்ன பெரிய வேறுபாடு?.

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரும் அவரது சினிமா ரசிகனுக்கும், சகாயம் முதல்வராகவேண்டும் என்று கூவிக்கொண்டிருக்கும் சகாயம் ரசிகர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு?.
அதைவிடக் கொடுமை, ஒரு மாநிலத்தலைநகரே வெள்ளத்தில் மூழ்கி சுமார் ஒரு கோடி பேர் உயிர் பிழைக்கவும் சுயமரியாதையுடனும் வாழவும் வழியின்றி தவித்து தத்தளித்துக்கொண்டிருக்கும் பேரவலத்திற்கு மத்தியில் சகாயத்தை முதல்வராக்கு என்று ஊர்வலம் போகும் கும்பல் கலாச்சாரத்தை தன் கள்ள மவுனத்தால், காரிய மவுனத்தால் அங்கீகரித்து ஆசீர்வதிக்கும் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் நேர்மையின் ஆழ அகலம் தான் என்ன? சமூகப்பொறுப்பின் சாத்தியம் என்ன?
தன் ஒவ்வொரு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பும் தன் அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்களை ஊக்குவிக்கும் ரஜினியின் வியாபார உத்திக்கும், ஸ்டிக்கர் ரெடியாகி வரும்வரை வெள்ள நிவாரணப்பணியில் ஈடுபடவிருந்த ஆம்புலன்ஸ் வண்டிகளை நிறுத்திவைத்த ஆட்சியாளர்களின் விளம்பர வெறிக்கும் சகாயத்தை முதல்வராக்கு என்கிற போதையில் மிதக்கும் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் சுயமோகம் எந்தவிதத்தில் குறைந்தது?
இந்த கேவலத்தை தட்டிக்கேட்கவேண்டிய "நடுநிலை நாயகர்கள்" இந்த சகாயம் பஜனை மண்டலியில் சேர்ந்துகொண்டு கோஷ்டி கானம் பாடுவது உச்சகட்ட அவலம்.
அய்யா நடுநிலை நல்லவர்களே, உங்கள் நாராச கச்சேரியை நிறுத்தாவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் சுருதியையாவது குறையுங்கள். பாதிக்கப்பட்டவர்களின் முக்கல் முனகல்கள் கொஞ்சமேனும் வெளியில் கேட்க விடுங்கள். அதுவே நீங்கள் செய்யக்கூடிய ஒரே சமூக சேவை