
---------------------------------------------------------------------
விதி மிகச்சரியாக இத்தருணத்தில் என்னை இங்கிருக்கச் செய்துள்ளது. மூன்று நாட்கள் ஆகிறது இங்கு வந்து. விடாது மழை பொழிந்து கொண்டிருக்கிறது இங்கு நேற்றிரவிலிருந்து. இன்னும் தொடரலாம்.
கடலூர் நகரின் நிலை இக்கணம்வரை பரவாயில்லை எனினும் விளிம்பு நிலையில் உள்ளது. பெண்ணையாறு எக்கணமும் வ்ழிந்தோடலாம்.
ஆயின் கடலூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள மிகப்பல கிராமங்கள் நீரில் மூழ்கியும் துண்டிக்கப்பட்டும் உள்ளன. கடவுள் அருளால் இங்கு இறங்கி வேலை செய்யும் நல்ல உள்ளங்களுக்கு குறைவில்லை. பொருளும் இயன்றவரை சேகரித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயின் இன்னும் எவ்வளவு இருப்பினும் தேவை அதைவிட அதிகம்.
இயற்கை ருத்ரதாண்டவமாடும் எப்பொழுதும் எங்கள் கடலூரில். அருகில் தில்லையம்பலத்தான் நடராஜன் இருப்பதும் காரணமாய் இருக்கலாம்.
நம் சென்னைக்கு உதவ மிகப்பல நல்ல உள்ளங்கள் உள்ளன. மகிழ்ச்சி. என் தாய் மனைவி, பிள்ளை உட்பட நூற்றுக்கணக்கான உறவுகளும், எண்ணிலடங்கா மிகப்பல உயிர்நட்புகளும் என் புகுந்தவீடான சென்னையில்தான் இத்தருணம் உள்ளார்கள். அவர்கள் என் தொடர்பில் இப்பொழுது இல்லை. உங்கள் உதவி எதோ ஒருவகையில் அவர்களைச் சேரும்.

ஆயின் இத்தருணம் இயற்கையோ, விதியோ எனை வைத்திருப்பது இங்கு நான் பிறந்த மண்ணில். என் பிறந்தவீட்டு மக்களுக்கு, கடலூர் மக்களுக்கு உங்களால் இயன்றதைத் தாருங்கள். உரிய முறையில் தேவையானவர்க்கு சேரும். அதற்கு நான் உறுதி. அருமையான இளைஞர் கூட்டம் அதற்கெனவே உள்ளார்கள் இங்கே இரவுபகல் பாராமல்.

எது என்பதோ, எண்ணிக்கையோ முக்கியமல்ல. அது எதுவாக் வேண்டுமானாலும் இருக்கலாம். பணம் தேவையில்லை. உணவோ, உடையோ, மருந்துகளோ, அத்தியாவசிய பண்டங்களோ, மளிகைகளோ, அரிசியோ, ஜமுக்காளங்களோ, டார்ச்சோ, பேட்டரியோ, எதுவோ, எதுவாயிருந்தாலும்.