புதன், 2 நவம்பர், 2016

அரசியல் சாசனம் 41வது பிரிவு, அரசியல் சாசனம் 343 (1)



அரசியல் சாசனம் 41வது பிரிவு

அனைவருக்கும் வேலை வாய்ப்பு தரப்பட வேண்டும்; சக்திக்கு மீறிய வேலையாக அது இருக்கக் கூடாது; வேலையில்லாதோருக்கும் முதியோருக்கும், நோயாளிக்கும், பொது நிதியிலிருந்து உதவ வேண்டும் என்றெல்லாம் இந்தப் பிரிவு கூறுகின்றது.
வேலை வாய்ப்பு இல்லாததால் தான் கொள்ளையடித்தோம்; திருடினோம்; கொலை செய்தோம் என்று எத்தனையோ வழக்குகளில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்துள்ளனர். அப்படியிருந்தும், இவ்வளவு நாட்களுக்குள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்; வேலை இல்லாதோருக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை ஆட்சியாளர்கள் செயல்படுத்தினால் நாட்டு மக்கள் கொந்தளித்துப் போக மாட்டார்கள். மாறாக மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு உத்தரவிடுவது யாருடைய அடிப்படை உரிமையையும் பறித்து விடாது.
தேவையான, அவசியமான இந்தக் கொள்கைகள் யாவும் இன்று வரை அமல்படுத்தப்படவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள தீய விளைவுகளைக் கண்ட பின்பும் காலக்கெடு நிர்ணயித்து அதை அமல்படுத்துமாறு நீதிமன்றங்கள் கட்டளையிடவில்லை.
கொள்கை விளக்கம் பகுதியில் உள்ளவற்றைச் செயல்படுத்துமாறு அரசுக்கு நீதிமன்றங்கள் கட்டளையிட முடியாது என்றே இதற்குப் பதில் கூறுகிறார்கள்.
மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய ஒப்பந்தப் பிரிவுகளைச் செயல்படுத்துமாறு கட்டளையிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்றால் மக்களுக்குப் பயன் தராத, நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடிய, தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறோமோ என்ற சந்தேகத்தை சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தக் கூடிய, இனிமேல் இந்த நாட்டில் முஸ்லிம்களாக வாழ முடியாதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய, அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான மதச் சுதந்திரத்துக்கு எதிராக அமைந்துள்ள 44வது பிரிவை அமல்படுத்துமாறு கட்டளையிடும் அதிகாரம் மட்டும் எங்கிருந்து முளைத்தது?
அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளையே பறிக்கக் கூடிய வகையில் பல மாநில அரசுகள் சட்டம் இயற்றியுள்ளன. இவர்கள் கொண்டு வர விரும்புகின்ற பொது சிவில் சட்டம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஒரு குடிமகன், தான் விரும்பிய மதத்தைப் பின்பற்ற அரசியல் சாசனம் உரிமை வழங்கியிருப்பதை முன்னர் குறிப்பிட்டோம். இந்த உரிமையை அப்பட்டமாகப் பறிக்கக் கூடிய வகையில் பல மாநில அரசுகள் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளன.
சிந்தித்து, விரும்பிய வழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பறிக்கப்பட்ட பின் ஜனநாயகம் என்பதற்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்துக்கும் எந்த அர்த்தமும் இருக்காது. இத்தகைய காட்டுமிராண்டிச் சட்டத்துக்கு எதிராக அறிவுஜீவிகளும், மத்திய ஆட்சியாளர்களும், நீதிமன்றங்களும் என்ன செய்தனர்? அரசியல் சாசனம் வழங்கிய உரிமையைப் பறிக்கும் இத்தகைய கருப்புச் சட்டங்களை அமல்படுத்தும் மாநில அரசுகள் எந்த அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றன? இத்தகைய அரசுகளை உடனே பதவி இழக்கச் செய்யும் நடவடிக்கைகள் ஏதும் உண்டா? நிச்சயமாக இல்லை.
ஒரு குடிமகன் தனக்குச் சொந்தமான பொருளை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த உரிமையைப் பறிக்கும் வகையில் பசுவை இறைச்சிக்காகக் கொல்லக் கூடாது என்று பல மாநில அரசுகள் சட்டம் இயற்றியுள்ளன. ஒருவனுக்குச் சொந்தமான, உணவாகப் பயன்படும் பொருளை அவன் சாப்பிடக் கூடாது என்று சட்டம் இருக்கும் நாட்டில் சுதந்திரம் எங்கே இருக்கிறது? ஜனநாயகம் எங்கே இருக்கிறது?
அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளாகக் கூறப்பட்ட உரிமைகளுக்கே இந்தக் கதி! இந்த அக்கிரமத்துக்கு எதிராகக் கடுமையான எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காத நீதிமன்றம், கொள்கை விளக்கத்தில் கூறப்படும் 44வது பிரிவை மட்டும் நிறைவேற்றத் துடிப்பது ஏன்? என்பது தான் நமது கேள்வி.
பொது சிவில் சட்டத்தை யார் உருவாக்குவார்கள்? பெரும்பான்மை மக்கள் தாம். பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தவர்கள். அவர்கள் உருவாக்கும் சட்டம் இந்து மத நம்பிக்கைகளுக்கு ஆதரவாகவே உருவாக்கப்படும். அதற்கு இந்தக் காட்டுமிராண்டித்தனமான மதமாற்றத் தடைச் சட்டமும், பசுவதைத் தடைச் சட்டமும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும்.
இந்து மதச் சட்டங்களை முஸ்லிம்கள் மேல் திணித்த பிறகு இந்து மத வழிபாட்டு முறைகள், "பொது வழிபாட்டு முறை' என்ற பெயரில் நாளை அறிமுகமாகும். அதற்கு முன்னோடியாகத் தான் பொதுசிவில் சட்டம் பற்றிப் பேசப்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை.
மொத்தத்தில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், நீதித்துறையினரில் பலர் ஆகிய அனைவரும் இந்த நாட்டை இந்து ராஜ்ஜியமாக மாற்றுவதற்குக் காய்களை நகர்த்தி வருகின்றனர் என்பது இதிலிருந்து தெரிய வரும்.
இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 44வது பிரிவை நினைவூட்டிப் பொது சிவில் சட்டம் ஒன்றை ஒரு வருடத்துக்குள் அமல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இன்னொரு வகையிலும் தவறாகும்.
ஒரு வாதத்துக்காக, 44வது பிரிவு அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று என்று வைத்துக் கொண்டால் கூட, "ஒரு வருடத்துக்குள்' என்று நீதிமன்றம் எந்த அடிப்படையில் முடிவு செய்தது? அரசியல் சாசனத்தை உருவாக்கியோர் எந்தக் கால வரம்பையும் கூறாதிருக்கும் போது, "ஒரு வருடத்துக்குள்' என்று வரம்பு கட்டிக் கூறியிருப்பதும் நாட்டு மக்களுக்கு, முஸ்லிம்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
தேவநாகரி வடிவத்தில் (லிபி) உள்ள ஹிந்தி, இந்தியாவில் அதிகாரப்பூர்வமான மொழியாக இருக்க வேண்டும்.
அரசியல் சாசனம் 343 (1)

அரசியல் சாசனத்தில், மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி தான் இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறப்படுகின்றது.
மத்திய அரசு, இனிமேல் மாநில அரசுகளுடன் இந்தியிலேயே தொடர்பு கொள்ள வேண்டும். மாநில அரசுகளும் இந்தி மொழியில் தான் மத்திய அரசுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
இதை உடனே அமல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடுமா? உத்தரவிட்டால் அதை மத்திய அரசு செயல்படுத்துமா? செயல்படுத்தினால் ஏற்படக் கூடிய விளைவுகளை நாம் கூற வேண்டுமா?
சட்டத்தை அமல்படுத்துவதை விட நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதே முக்கியமாகும். இதை உணர்ந்த காரணத்தினால் தான், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்கும் என்று நேரு உறுதியளித்தார். இந்த உறுதி மொழி அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றாலும் மொழிவழிச் சிறுபான்மை மக்களின் கொந்தளிப்பைக் கவனத்தில் கொண்டு, நாடு பிளவுபட்டு விடக் கூடாது    என்ற நல்லெண்ணத்தில் இந்தி திணிக்கப்படாமல் உள்ளது.
சிறுபான்மை மொழியினரால் ஏற்படும் பிரச்சனைகளைக் கருதி, வேண்டாத விபரீதங்களைத் தடுக்க எண்ணி, நாடு முழுவதும் இந்தி மொழியை ஆட்சி மொழியாக்க முடியவில்லை எனும்போது, சிறுபான்மை மதத்தவர்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தக் கூடிய விஷயத்தில் மட்டும் தேவையற்ற உத்தரவை, நீதிமன்றம் தமது அதிகார வரம்பின் கீழ் வராத விஷயத்தில் ஏன் வழங்க வேண்டும்?
இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று இனிமேல் உத்தரவு பிறப்பிக்க இந்தத் தீர்ப்பு வெள்ளோட்டமாகக் கூட அமையலாம். மொழிப் பற்றாளர்களும், மொழிக்காகப் போராடுபவர்களும், பொதுசிவில் சட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் தவறினால், நாளை மொழியைக் காக்க அவர்கள் போராட வேண்டியிருக்கும். அப்போது போராடுவதில் பயனில்லாமல் போகலாம்.
குடிமக்கள் அனைவரும் சமமான உரிமை பெற்றவர்கள் என்று அரசியல் சாசனம் கூறுவதால், இனிமேல் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு, தேர்தல் தொகுதி ஆகியவற்றில் தனி இட ஒதுக்கீடு அறவே கூடாது என்று நாளை தீர்ப்பு வழங்கப்படலாம். எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தின் நோக்கம் என்று அப்போதும் நியாயம் கூறப்படலாம். அதற்கான வெள்ளோட்டமாகவும் இத்தீர்ப்பு அமையக் கூடும். எனவே பொது சிவில் சட்டத்துக்கு எதிராக அவர்களும் சேர்ந்து போராடக் கடமைப்பட்டுள்ளனர்.
தனியார் சிவில் சட்டம், சிறுபான்மை மொழிப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு ஆகிய விஷயங்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சேர்க்கப்படுவதற்குப் போராட வேண்டிய நேரம் இது! இதுபோன்ற தீர்ப்புக்கள் வழங்கப்படுவதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் 44வது பிரிவு போன்றவை நீக்கப்படுவதற்கு அவர்களும் போராடியாக வேண்டும்.
அறிவு ஜீவிகள் என்று தங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்போர், "பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு கொடுப்பது தான் அறிவின் வெளிப்பாடு' என்பதைப் போல் நடந்து கொள்கின்றனர். இதையொட்டி அரிய தத்துவங்களை எல்லாம் அள்ளித் தெளித்து வருகின்றனர். அவர்களின் உளறல்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய சிவில் சட்டம் கோருபவர்கள், இஸ்லாமியக் கிரிமினல் சட்டம் கோர மறுப்பதேன்? அறிவு சீவி(?)களின், ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கேள்வி இது!
இந்தக் கேள்வியிலேயே அவர்களது மேதாவிலாசம் நமக்குத் தெரிந்து விடுகின்றது. இந்த அபத்தமான கேள்விக்கு விடையளிப்பதற்கு முன்னால் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் விளக்கியாக வேண்டும்.
முஸ்லிம்களுக்கு, கிரிமினல் சட்டங்கள் அனைத்தும் இ.பி.கோ. பிரகாரமும், சிவில் சட்டங்கள் அனைத்தும் இஸ்லாமிய சட்டப் பிரகாரமும் அமைந்திருப்பது போல் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் தவறாகும்.
கிரிமினல் விவகாரங்கள் எவ்வாறு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் பொதுவாக உள்ளனவோ அது போல் தான் சிவில் விவாகரங்களும் இந்திய உரிமையியல் சட்டத்தின் பிரகாரம் அனைவருக்கும் பொதுவாக உள்ளன. இதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் கடன் கொடுக்கிறான். இது சிவில் விவகாரம். கொடுத்த கடன் திரும்பி வரவில்லை. பலமுறை கேட்டுப் பார்த்தும் கடன் வாங்கியவன் திருப்பித் தர மறுக்கிறான்; இழுத்தடிக்கிறான். கடன் கொடுத்தவன் நீதிமன்றத்தை அணுகுகின்றான். இவ்வாறு அணுகும் போது மூன்று ஆண்டுகள் கடந்து விட்டால் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்க முடியாது. மூன்று வருடம் முடியாவிட்டால் தான் கொடுத்த கடனைத் திருப்பித் தருமாறு நீதிமன்றம் உத்தரவிடும்.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இப்படித் தான் தீர்ப்பு வழங்கப்படும்.
இஸ்லாமியச் சட்டப்படி வாங்கிய கடனை எவ்வளவு நாட்கள் சென்றாலும் கொடுத்துத் தான் தீர வேண்டும். சிவில் சட்டங்கள் முஸ்லிம்களுக்குத் தனியாக உள்ளன என்றால் முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தின்படியே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
எந்தக் கடன் கொடுக்கல் வாங்கலுக்கும் வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும் என்று இங்கே சட்டம் உள்ளது. முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இவ்வாறு தான் தீர்ப்பு வழங்கப்படும்.
முஸ்லிம்களுக்கு எல்லா விஷயத்திலும் தனி சிவில் சட்டங்கள் உள்ளன என்றால் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட கடன் கொடுக்கல் வாங்கலுக்கு வட்டி கொடுக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாது. ஏனெனில் இஸ்லாத்தில் வட்டி முழுமையாகத் தடுக்கப்பட்டதாகும்.
உதாரணத்திற்குத் தான் இந்த இரண்டை மட்டும் இங்கே எடுத்துக் காட்டியுள்ளோம். சிவில் சட்டங்கள் அனைத்துமே இப்படிப் பொதுவாகத் தான் உள்ளன.
திருமணம், தலாக் (கணவன், மனைவியை விவாகரத்துச் செய்வது), குல்ஆ (மனைவி, கணவனை விவாகரத்துச் செய்வது), பஸக் (முஸ்லிம் தலைவர் ஒருவர் ஒரு திருமணத்தைச் செல்லாது என்று அறிவித்தல்), வாரிசுரிமை, வக்ஃபுச் சட்டங்கள் ஆகியவற்றில் மட்டுமே முஸ்லிம்கள் தம் மார்க்கத்தின்படி நடந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமறிந்த வரையில் இவற்றைத் தவிர மற்ற சிவில் விவகாரங்களில் பொதுசிவில் சட்டமே முஸ்லிம்களுக்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
பார்ப்பன ஏடுகளும், அறிவுஜீவிகள் என்று கூறிக் கொள்ளும் மேல் ஜாதியினரும் எல்லா விஷயங்களிலும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சிவில் சட்டம் வழங்கப்பட்டுள்ளது போலப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இப்பிரச்சாரம் விஷமத்தனமானது; பொய்யானது என்பதைச் சுட்டிக் காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறோம்.
நாம் சுட்டிக் காட்டிய திருமணம் முதலான விவகாரங்கள், முஸ்லிம்கள் தங்களுக்கிடையே அமல்படுத்திக் கொள்ளக் கூடியவை. மற்ற சமுதாயத்திற்கோ, நாட்டுக்கோ இதனால் எந்தப் பாதிப்பும் கேடும் ஏற்படப்போவதில்லை. இந்தச் சட்டங்களை அமல் செய்வதால் முஸ்லிம்களில் சிலருக்குச் சிரமம் ஏற்பட்டால் கூட அதை சிரமப்படுபவன் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறான். அறிவுஜீவிகள் இதை உணர வேண்டும். இனி அவர்களின் கேள்விக்கு வருவோம்.
கிரிமினல் சட்டங்கள் ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்படுபவை. சிவில் சட்டங்களிலும் பெரும்பாலானவை ஆட்சியாளர்களால் அமல்படுத்தப்படுபவை. மக்கள் இதைத் தாங்களாகவே அமல்படுத்த முடியாது. மக்கள் தமக்கிடையே நடைமுறைப்படுத்திக் கொள்ளக் கூடிய - மதம் சம்பந்தப்பட்ட - மிகச் சில விஷயங்களில் மட்டுமே தனியார் சிவில் சட்டம் உள்ளது.
இஸ்லாமிய ஆட்சி முறையில் கூட கிரிமினல் சட்டத்தை ஆட்சியாளர்கள் தாம் அமல்படுத்த முடியும். இந்தச் சாதாரண உண்மை கூட அறிவுஜீவிகளான இவர்களுக்கு விளங்கவில்லை.
கிரிமினல் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய கடுமையான தண்டனைகளை உங்களுக்குள் நீங்களே அமல்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரசு, முஸ்லிம்களை நச்சரித்து வருவது போலவும், அச்சட்டத்தின் கொடுமைக்கு அஞ்சி முஸ்லிம்கள் தயங்குவது போலவும் இத்தகைய கேள்விகளால் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய கிரிமினல் சட்டங்களை, முஸ்லிம்கள் தங்களுக்கு ஏற்படும் கிரிமினல் விவகாரங்களில் அமல்படுத்திக் கொள்ள அரசு அனுமதித்தால் முஸ்லிம்கள் அதை மனப்பூர்வமாக ஏற்கத் தயாராக உள்ளனர். இஸ்லாமிய கிரிமினல் சட்டங்களால் தான் குற்றங்களைக் குறைக்க முடியும் என்பதில் முஸ்லிம்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு என்பதை அறிவுஜீவிகள் உணரட்டும்.
இன்னொன்றையும் அறிவுஜீவிகள் கவனிக்க வேண்டும். ஓரிரண்டு விஷயங்களில் முஸ்லிம்கள் தமது மார்க்கத்தின்படி நடந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது போலவே மற்ற மதத்தவர்களுக்கும் சில தனிச் சட்டங்கள் உள்ளன.
ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுவதற்குக் குடிமக்களுக்கு உரிமை இருக்கின்றது.
(அரசியல் சாசனம் 19வது பிரிவு (1) ஆ)
ஆயுதங்களின்றி கூடுவதற்குத் தான் குடிமக்களுக்கு உரிமை உண்டு என்று அரசியல் சாசனம் கூறுகின்றது. 
கிர்பான் (குறுவாள்) வைத்திருப்பதும், அணிந்திருப்பதும் சீக்கிய மதத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படும்.
ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுவதற்குக் குடிமக்களுக்கு உரிமை இருக்கின்றது.