வியாழன், 3 நவம்பர், 2016

ஒரு சகாப்தத்தின் முதல் பயணம் தொடங்கிய நாள்.. தெருநாய் லைகாவின் கதை

விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினம் எனும் பெருமை பெற்ற லைகா எனும் நாய் ஸ்புட்னிக்-2 விண்கலம் மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய நாள் இன்று.
விண்வெளி ஆய்வில் பல மைல்கற்களை மனித இனம் இன்று கடந்த நிற்கிறது. இந்த சகாப்தத்தின் தொடக்கமாக லைகா எனும் பெயர்கொண்ட நாயினை 1957ம் ஆண்டு நவம்பர் 3-ல் ஸ்புட்னிக்-2 விண்கலம் மூலம் சோவியத் ரஷ்யா அனுப்பியது. இதன்மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினம் என்ற பெருமையை லைகா எனும் அந்த பெண் நாய் பெற்றது.
விண்வெளிக்குச் செல்வதற்கு சில நாட்கள் முன்னர் வரை மாஸ்கோ நகர வீதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தது லைகா. வரலாற்றில் ஒரு நிரந்தரமான இடம் பிடித்த லைகாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு எதிராக வனவிலங்கு ஆர்வலர்கள் குரல்கொடுத்தனர். அந்த எதிர்ப்புகளைப் புறக்கணித்த சோவியத் ரஷ்யா, அக்டோபர் புரட்சியின் 40ஆவது ஆண்டுவிழாவின் நினைவாக விண்கலம் செலுத்தப்படுவதாக அறிவித்தது. லைகா மட்டுமல்ல விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான யூரி காகரினுக்கு முன்பாக சோவியத் ரஷ்யா அனுப்பிய 36 நாய்களும் தெருநாய்கள்தான். விண்வெளியில் ஒருவாரம் வரை உயிர்வாழ்ந்த லைகாவின் உயிர் அமைதியாகப் பிரிந்ததாக சோவியத் ரஷ்யா தெரிவித்தது.
Laika
ஆனால், 2002-ல் வெளியான தகவல்களின்படி, விண்கலம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே லைகா உயிரிழந்தது தெரியவந்தது. அதிக வெப்பம் மற்றும் காஸ்மிக் கதிர்களின் தாக்கத்தால் லைகா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சோவியத் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வுகள் குறித்து பதிவு செய்த விஞ்ஞானி விளாடிமிர் யாஸ்டோவ்ஸ்கி, பயணத்துக்கு முன்னதாக அமைதியாகவும், அழகாகவும் லைகா காட்சியளித்ததாக எழுதியிருந்தார்.