புதன், 22 பிப்ரவரி, 2017

எண்ணூர் கடற்கரை பகுதி மக்களுக்கு தொடர் மருத்துவ பரிசோதனை நடத்த மருத்துவர் குழு பரிந்துரை

சென்னை எண்ணூர் கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொடர் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என அரசுக்கு மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் ஸ்ருதி, கடந்த மாத இறுதியில் எண்ணூர் கடல் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு பாதிப்புகள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி அகற்றப்பட்டதாக குறிப்பிட்டார். 

எனவே, அப்பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அரசு சார்பில் சிறப்பு முகாம் நடத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

எண்ணூரில் கடந்த மாதம் இரு கப்பல்கள் நடுகடலில் மோதியதாகவும், அதனால் கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடலில் கொட்டிய எண்ணெயின் அளவு குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியான நிலையில், நூற்றுக்கணக்கான டன்கள் அளவு எண்ணெய் வாலிகள் மூலம் எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கப்பல்கள் மோதவில்லை என்றும், பன்னாட்டு நிறுவனங்களின் கழிவு கடலில் கொட்டப்பட்டதாக முரண்பட்ட தகவல்களும் இணையத்தில் உலவின. இதற்கு வலு சேர்க்கும் வகையில் கப்பல்கள் மோதியதற்கான வலுவான சான்றாதாரங்களும் அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை. 

இந்நிலையில், எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட வருமாறு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று ஏராளமான மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இப்பணியில் ஈடுபட்டதால் பலருக்கு தோல் சார்ந்த உபாதைகள் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/21/2/2017/doctors-advice-goverment-conduct-medical-camps-regulary-ennore

Related Posts: