அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் யார்? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து, பட்டப்படிப்பு, டிப்ளமோ உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 பெறுவதற்கு தகுதியான மாணவிகளிடமிருந்து சான்றிதழ்களை பெற அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், “கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தமைக்கான சான்று உள்ளிட்டவற்றுடன் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை கல்லூரி முதல்வர்கள் பெற வேண்டும்.
முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்கள் பெற வேண்டும். இந்த தகவல்கள் சமூகநலத்துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பதால், சான்றிதழ்கள் பெறும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். சான்றிதழ்களைப் பெற்ற உடன், அவற்றைச் சரிபார்க்கும் பணி தொடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் மொத்தம் 2.70 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மாணவிகளின் விவரங்களை https://studentsrepo.tn, https://schools.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-govt-provide-rs-1000-to-girl-students-doing-higher-studies-470266/