வெள்ளி, 24 ஜூன், 2022

எம்.ஜி.ஆர் மறைவின்போது அதிமுகவில் நடந்தது என்ன ?

 24 96 2022 

அதிமுகவில் முதலில் சலசலப்பு, பிளவு, ஒருங்கிணைவது என்பது புதிதல்ல. இது ஒரு தொடர்கதையாக நடைபெற்று வருவதுதான் எனக் கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆர் மறைவை அடுத்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவால், இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.

தற்போது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இதேபோன்றதொரு சூழல், கடந்த 1987ல் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் மறைவின் போது ஏற்பட்டது. 1984ம் ஆண்டு முதலே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், 1987 டிசம்பர் 24ல் உயிரிழந்தார்.

இதுகுறித்து தமது மலரும் நினைவுகளை பகிர்ந்த சசிகலா, ’எம்ஜிஆர் மறைவின்போது ஜெயலலிதா தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை நெருங்கவிடவில்லை இதையடுத்து சில காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் உள்ளே சென்றோம். அப்போதும் ஜெயலலிதாவை எம்ஜிஆர் உடல் அருகே நெருங்கவேவிடவில்லை. இதையடுத்து பல்வேறு அவமானங்களுக்கு மத்தியில் நாங்கள் ராஜாஜி அரங்கில் அவரது உடல் அருகே போய் நின்றோம்.

ஜெயலலிதா ஆனால் எங்களை சிலர் துன்புறுத்தினர். ஆனால் நான் இதை ஜெயலலிதாவிடம் சொல்லாமல் அவர் எம்ஜிஆரின் உடலை பார்க்க வேண்டும் என்பதால் பொறுத்துக் கொண்டேன். இரு தினங்களாக ஜெயலலிதா எதையும் சாப்பிடவில்லை. அதிர்ச்சி அவரது உடல் அருகே நின்றிருந்த போது கூட எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் அதிர்ச்சியிலேயே சோகமாக நின்றிருந்தார்.

தண்ணீர் அருந்துமாறு கூறியும் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து நாங்கள் போயஸ் தோட்டத்திற்கு திரும்பினோம். அங்கு ஜெயலலிதாவின் அம்மாவின் பெரிய புகைப்படம் இருக்கும். அந்த புகைப்படத்திற்கு முன் நின்று கொண்டு அழுதார். பின்னர் கீழே விழுந்து புரண்டார். அதில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது, பின்னர் தண்ணீர் தெளித்து அவரை ஆசுவாசப்படுத்தினேன்’ என்றார் சசிகலா.

இது ஒருபுறமிருக்க தமிழகத்தின் தற்காலிக முதலமைச்சராக நெடுஞ்செழியன் பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சராக ஜானகி பதவியேற்க வேண்டும் என்று எம்ஜிஆரின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட ஆர்.எம். வீரப்பன் மற்றும் பொன்னையன் உள்ளிட்டோர் கூறினர். அதேநேரம், முதலமைச்சராக அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், மாநிலங்களவை எம்பியாகவும் இருந்த ஜெயலலிதா பதவியேற்க வேண்டும் என்று நெடுஞ்செழியன் தெரிவித்தார். அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டதாக ஜெயலலிதா அறிவித்ததால், ஜெ அணி, ஜா அணி என அந்த கட்சி இரு பிரிவுகளாகப் பிரிந்தது.

அதிமுக எம்எல்ஏக்கள் 97 பேர் ஜானகிக்கும், ஜெயலலிதா அணிக்கு 29 பேரும் ஆதரவளித்தனர். பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக ஜானகி பதவியேற்றுக் கொண்டார். தமிழக சட்டப்பேரவையில் ஜானகி தலைமையிலான அரசு 21 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அன்றைய ஆளுநர் எஸ்.எல். குராணா உத்தரவிட்டார். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழகம் கண்டிராத வகையில், சட்டமன்றத்தில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. மோதலை அடுத்து ஜானகி தலைமையிலான அரசு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அடுத்த சில தினங்களில் அரசியல் சாசனத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் ஆட்சியைக் கலைத்தார். இதையடுத்து தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி, 1989 ஜனவரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வரையில் ஓராண்டு காலம் அமலில் இருந்தது. அந்த தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் இரு அணிகளுக்குமே ஒதுக்கப்படாமல் முடக்கப்பட்டது.

இந்தநிலையில், ஜானகி தலைமையிலான அணி இரட்டைப் புறா சின்னத்திலும், ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்திலும் தேர்தலில் களம்கண்டன. பிளவுபட்ட நிலையில் தேர்தலை அதிமுக சந்தித்ததால், அந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது. எம்ஜிஆரால் பல ஆண்டுகள் ஆட்சியை இழந்திருந்த திமுக பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஜானகி தலைமையில் களம் கண்ட ’ஜா’அணி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜானகி தோல்வியைச் சந்தித்த நிலையில், போடிநாயக்கனூர் தொகுதியில் வெற்றிபெற்று ஜெயலலிதா சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.

அந்த தேர்தலில் ஜெயலலிதா அணி 27 தொகுதிகளில் வென்றது. தேர்தல் தோல்விக்குப் பின்னர் அரசியலில் இருந்து விலகுவதாக ஜானகி அறிவிக்க, ஜெயலலிதா தலைமையின்கீழ் அதிமுக ஒன்றிணைந்தது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தையும் ஜெயலலிதா மீட்டார்.

 

அதேபோன்று ஒரு சூழல் தற்போது தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து ஒருமுறை அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டது. தற்போது அதேபோன்று ஒரு சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம் அதிமுக அனுதாபிகளிடம் காணப்படுகிறது. இதனையறிந்துள்ள எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா தமிழகத்தில் காலுன்ற வேண்டுமென்றால் அதிமுகவின் உதவியின்றி முடியாது. இப்போது சின்னத்தை முடக்கினால் அதிக பாதிப்பு பாஜகவிற்கே ஏற்படும் என அவருக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம். அதனால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் யாருக்கு கட்சி என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எடப்பாடி அணியினரிடம் உள்ளது. இதே மனநிலையில்தான் ஓபிஎஸ் தரப்பும் உள்ளது.

ஓபிஎஸ் தரப்பை பொறுத்தவரை எடப்பாடியை விட பாஜகவிற்கு நெருக்கமானவர் ஓபிஎஸ் என்பதால் அவருக்கு ஆதரவாகவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என அவர்கள் கருதுகின்றனர். இந்த சூழல் நீடித்தால் இருவரையும் இணைத்து வைக்கும் முயற்சியில் இதற்கு முன்னர் பாஜக இறங்கியதுபோல், இந்த முறையும் இறங்குமா ? அல்லது பாரமுகமாக இருக்குமா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இராமானுஜம்.கி



source https://news7tamil.live/what-happend-while-mgr-died.html