ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்
பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதற்காக மத்தியஅரசிற்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
விருப்பமனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதில் இன்று காலை
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். மாலை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு விருப்ப மனுக்களை
நிர்வாகிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீர், நிலம், காற்று ஆகியவற்றை சிதைக்கக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே இதற்கான தடைவிதித்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத நிலையை உருவாக்கி வருகிறார்.
மேலும் மாற்று பொருளான மீண்டும் மஞ்சள் பை திட்டத்தையும் தமிழக முதல்வர் கொண்டு வந்து இந்த திட்டம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் தற்போது 20% பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இது தமிழக அரசு கிடைத்த வெற்றி. இதற்காக மத்திய அரசிற்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதுவரை 1117 மெட்ரிக் டன் தடை செய்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 174 பை தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
105 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னமும் உள்ளது.
இதற்கு காரணம் இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லாததுதான்.
தற்போது இந்த தடை மத்திய அரசால் கொடுக்கப்பட்டுள்ளதால் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்கள் வராத
சூழ்நிலை ஏற்படும். மக்களிடையே மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே முழுமையாக பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த முடியும்.
தமிழக அரசு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு எங்கெங்கெல்லாம் பிளாஸ்டிக்
பயன்பாடு உள்ளதோ அதை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் நகராட்சி மாநகராட்சி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஒரு நாளில் மட்டும் 187 டன் குப்பைகளை சேகரித்து உலக அளவில் சாதனையை புரிந்துள்ளார். இந்த முயற்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் மெய்யநாதன்.
source https://news7tamil.live/minister-meyyanathan-welcomes-the-ban-on-plastic-products.html