சனி, 18 ஜூன், 2022

ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டாம்”

 

வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் ஏஜெண்டுகளை நம்பி செல்ல வேண்டாம் என குவைத்தில் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த தனலட்சுமி கண்ணீர் மல்கப் பேட்டியளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சியைச் சேர்ந்தவர் தனலட்சுமி(45) இவரது கணவர் பெயர் சசிகுமார்(55) இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் திருமணமாகி தனியாக வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில், கணவர் சசிகுமாரின் வருமானம் வீட்டுச் செலவிற்கு பற்றாமல் போனதாலும், மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்பதாலும் வேலைக்குச் செல்வதாக முடிவெடுத்த தனலட்சுமி வெளிநாட்டிற்குச் சென்று வேலை செய்யலாம் என்று யோசித்து உள்ளார். இதுகுறித்து வீட்டிற்கு அருகில் உள்ளவர்களை விசாரித்த போது, விழுப்புரத்தில் உள்ள தனியார் ஏஜெண்ட் அமீர் மூலம் வெளிநாடு செல்ல கடந்த ஏப்ரல் மாதம் 50ஆயிரம் ரூபாயை ஏஜெண்டிடம் கொடுத்துள்ளார்.

அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி கேரளாவுக்குச் சென்று அங்கிருந்து, 6ஆம் தேதி விமானம் மூலம் குவைத்திற்கு சென்றுள்ளார். குவைத்தில் வீட்டு வேலை செய்வதற்கும், சமையல் வேலை செய்வதற்கும் சென்ற அவருக்கு, பல கொடுமைகளும், துன்புறுத்தல்களும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், அங்கிருந்து தப்பித்து தாயகத்திற்குத் திரும்ப வேண்டும் என்று நினைத்த அவர் திரும்ப முடியாமல் தவித்து உள்ளார்.

பின் சமூக ஆர்வலர்கள் உதவியுடன், குவைத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட தனலட்சுமி, விமானம் மூலம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தனலட்சுமி, குவைத்தில் தன்னை சமையல் வேலைக்கும் வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு என்னை மூட்டை தூக்க வைத்தார்கள். 16 மணி நேரம் வேலை வாங்கினார்கள், அடித்து சித்திரவதை செய்தார்கள், உணவு அளிக்கவில்லை, குடும்பத்தாரிடம் போனில் கூட பேசக் கூடாது என்றும் துன்புறுத்தினார்கள் எனத் தெரித்தார்.

அண்மைச் செய்தி: ‘வாட்ஸ்அப்பை எப்படி ‘பாதுகாப்பாக’ பயன்படுத்துவது; இதோ சில டிப்ஸ் உங்களுக்காக’

கழிவறையில் அடைத்து வைத்ததாகவும் கழிவறையில் வரும் தண்ணீர் தான் குடிக்க வேண்டும் எனக் கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்த அவர், தன்னை சமூக ஆர்வலர்கள் மீட்டு சென்னைக்கு அழைத்து வந்ததாகத் தெரிவித்தார். மேலும், தன்னை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த ஏஜெண்ட் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளதாகவும், அங்கு பணிபுரிந்த போது மாத ஊதியம் கூட எதுவும் தரவில்லை எனத் தெரிவித்த அவர், தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள் எனக் கண்ணீர் மல்கப் பேட்டியளித்தார்.

source https://news7tamil.live/please-do-not-rely-on-agents-to-go-abroad.html