வெள்ளி, 17 ஜூன், 2022

ஆளுநர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் – கி.வீரமணி

 

ராஜ்பவன் ஆர்எஸ்எஸ் உடைய கூடாரமாக செயல்பட்டு வருவதாக கூறிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ரிஷிகள், சனாதனம் பற்றிய கருத்தை ஆளுநர் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சனாதனத்தை ஆதரித்து அரசியல் சட்டத்தை அவமதிப்பதாக கூறி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் நீதிபதி அரிபறந்தமான், சுப வீரபாண்டியன், அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, ஆளுநருடைய செயல்பாடு ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு என்கின்ற மாநிலத்திற்குதலைகுனிவை ஏற்படுத்துவதாக கூறினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றி அனுப்பிய 19 மசோதாக்களையும் ஊற வைத்து ஊறுகாய் போட்டுக் கொண்டிருக்கிறார் என நினைப்பதாக அவர் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை முடக்குவதற்காக ஆளுநர் ஆர் எஸ் எஸ்-ஆல் அனுப்பப்பட்டுள்ளார் என்றும் ரிஷிகளையும், ஞானிகளையும் நம்பும் ஆளுநர் ரவி எதற்காக பீகாருக்கு விமானத்தில் செல்கிறார் என கேள்வி எழுப்பினார். ஆளுநர் பேசிய கருத்துக்கள் தொலைக்காட்சி எனும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தான் நாம் அறிந்து கொள்கிறோம் என்றார்.

 

மேலும் ஆளுநர் உடைய சனாதனத்தை பற்றிய கருத்து அவருடைய அறியாமையை காட்டுவதாக தெரிவித்த கி.வீரமணி, ஆளுநர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ஆளுநர் தனது கருத்தை திரும்பப் பெற்று, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படாத பட்சத்தில் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்


source https://news7tamil.live/governor-should-withdraw-his-opinion-k-veeramani.html