கும்பகோணம் அருகேயுள்ள சிவபுரம்கிராமத்தைச் சேர்ந்தவர் கே.நாராயணசாமி. இவர், தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், ‘‘சிவபுரம் அருள்மிகு சிவகுருநாத சுவாமி திருக்கோயிலில் இருந்த தொன்மையான பல உற்சவர் சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு விட்டன. எனவே, அவற்றை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்படி, ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சிவபுரம் கோயில் சிலைகள் திருடப்பட்டு, அதற்குப் பதிலாக வேறு சிலைகள் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அந்தக் கோயிலில் திருடப்பட்ட சிலைகள், வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு, அங்குள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவா எனவும் விசாரணை நடத்தப்பட்டது. இதில், சிவபுரம் கோயிலில் திருடப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் அம்மன் சிலைகள், அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா, டென்வரில் உள்ள அருங்காட்சியங்களில் இருப்பது தெரியவந்தது.
சோழர்காலத்தைச் சேர்ந்த இந்த இரு வெண்கலச் சிலைகளையும் மீட்டு, தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-police-finding-tamil-god-statue-in-the-american-museum-467715/