வியாழன், 16 ஜூன், 2022

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் ?

 

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா அல்லது காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்துவார்கள் எனத் தெரிகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் விந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களின் வாக்குகளில் சுமார் 49 சதவீத வாக்குகளை பா.ஜ.க கூட்டணி பெற்றுள்ளது. குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

பாஜகவுக்கு எதிராக பா.ஜ.க சார்பில் நிறுத்தப்படும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், டி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகள் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை களமிறக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, மம்தா பானர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்பட நாடு முழுவதும் உள்ள 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். அதன்படி குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், பிரபுல் படேல், சமாஜ்வாடி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தேவகவுடா, குமாரசாமி, தேசிய மாநாட்டு கட்சி சார்பில் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விருப்பம் தெரிவித்தன. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திரிணாமுல் காங். தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் முன்பே சரத் பவாரை சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரத்பவாருக்கு விருப்பம் இல்லை என அவர் கூறிவிட்டார்.

இந்தநிலையில் இதுதொடர்பாக அடுத்தடுத்த முடிவுகளை மேற்கொள்ள. மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் ஆகிய 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த கூட்டம் எப்போது என முடிவெடுப்பார்கள் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி அல்லது பரூக் அப்துல்லாவை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் கோபால கிருஷ்ண காந்திக்கு இந்த தகவல் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் இதுகுறித்து யோசிக்க சிறிது கால அவகாசம் தேவை எனக்கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இராமானுஜம்.கி

source https://news7tamil.live/who-is-common-candidate-for-opposition-parties-in-president-election-2.html