“இளைஞர்கள் தேன்கூடு போன்றவர்கள். அவர்கள் எதிர்காலம் மீது நீங்கள் தொடர்ந்து கல் எறிந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என அக்னிபாத் திட்டம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு, “முப்படைகளுக்கும் 46 ஆயிரம் படை வீரர்களைத் தேர்வு செய்யும் அக்னிபாத் என்ற திட்டத்தை மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. முப்படைகளின் நீண்ட கால மரபுகள் மற்றும் நெறிமுறைகளைத் தகர்க்கும் அக்னிபாத் திட்டம் ஆபத்தானது. இந்தத் திட்டத்தில் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களில் 75 சதவிகிதம் பேர் அடுத்த 42 மாதங்களில் பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “75 சதவிகிதம் பேரை பணியிலிருந்து விடுவிக்கிறார்கள் என்றால், அவர்கள் சரியான பயிற்சி பெறவில்லை என்றே அர்த்தம். சரியான பயிற்சி பெறாதவர்களை எப்படி பணியாற்ற அனுமதிக்க முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது. 42 மாதங்களுக்கு மட்டும் பணியாற்ற அனுமதிப்பது பயிற்சித் திட்டத்தையே கேலிக்குரியதாக்குகிறது. அக்னிபாத் திட்டம் என்பது சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கையோ? என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.
அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணத் தவறியதால், நமது எல்லையில் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் நன்கு பயிற்சி பெற்ற, திறமையான, எதிர்காலம் குறித்த பயம் ஏதும் இல்லாத படை வீரர்கள் அவசியம். எனவே, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி தரம், செயல் திறன் மற்றும் பொருளாதாரம் ஆகிய 3 விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.
அக்னிபாதை திட்டத்தினால் நாடே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்டு சொத்துகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. அக்னி பாதை வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது என்றும், ஓய்வூதியம் வழங்குவதால் அதிக நிதிச்சுமை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ராணுவத்திற்கு ஒதுக்கப்படுகிற மொத்த நிதி ஒதுக்கீட்டில் ஓய்வூதியம் 20 சதவிகிதம் தான். பணி பாதுகாப்பில்லாத காரணத்தால் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில், அர்ப்பணிப்பு உணர்வோடு உயிரையும் துறக்க வேண்டிய ராணுவப் பணியில் அக்னி வீரர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றுவார்களா?
பணமதிப்பிழப்பு நடவடிக்கை முதல் பொது முடக்க அறிவிப்பு வரை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று மோடி அரசு செயல்பட்டதால், இன்றைக்குக் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களது எதிர்காலத்தை உறுதி செய்யாமல், தொடர்ந்து அவர்களுக்கு எதிரான மத்திய அரசின் தொடர் தாக்குதலே இந்த அக்னிபாத் திட்டம். இளைஞர்கள் தேன்கூடு போன்றவர்கள். அவர்கள் எதிர்காலம் மீது நீங்கள் தொடர்ந்து கல் எறிந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இத்திட்டம் புரட்சிகர திட்டம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/young-people-are-like-honeycomb-the-effect-will-be-worse-if-the-stone-is-thrown-congress.html