வெள்ளி, 24 ஜூன், 2022

5 மாதங்களை எட்டியது ரஷ்யா-உக்ரைன் போர்

 

25.6.2022 உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 5ஆவது மாதத்தை எட்டியது. கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா அறிவிக்கப்படாத போரை தொடங்கியது.

அடிபணிய மறுத்த உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து போர்க்களத்தில் நிற்கிறது. இந்தப் போர் காரணமாக 20 லட்சத்துக்கு அதிகமான மக்கள் உயிருக்கு அஞ்சி அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். மேலும், இரு நாடுகளிலும் ராணுவ வீரர்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தனர்.  நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ரஷ்யா தாக்குதலை நடத்தியது.

உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து போராட அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளையும் அளித்து வந்தது. உக்ரைனின் லுஹன்ஸ்க் மாகாணத்தின் 95 சதவீதப் பகுதிகளை ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக சேர்வதற்கான முன்முயற்சிக்கு உக்ரைனுக்கு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

உக்ரைன் கடற்கரையில் கண்ணிவெடிகளை அகற்றுவதில் உதவ தயாராக இருப்பதாகவும், தானிய ஏற்றுமதியை எளிதாக்க கப்பல்களுக்கு காப்பீடு வழங்கலாம் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்தார்.

ஐரோப்பாவின் மனித உரிமைகள் நீதிமன்றத்தில் தனது சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ள உக்ரைன், தனது நாட்டின் மீதான படையெடுப்பின்போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்காக ரஷ்யாவிடம் இருந்து 80 பில்லியன் டாலர் இழப்பீடு கோரியுள்ளது.

-மணிகண்டன்

source https://news7tamil.live/the-russia-ukraine-war-lasted-5-months.html