வியாழன், 16 ஜூன், 2022

3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் முதல் மரணம்

 16 6 2022 

தஞ்சாவூரைச் சேர்ந்த 18 வயது பெண் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடும் இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 18 வயது பெண் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முயற்சித்துள்ளனர். இந்நிலையில் அவர் மதியம் 2.30 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த 90 நாட்களில் கொரோனா பாதிப்புக்கு யாரும் உயிரிழக்காத நிலையில் இந்த முதல் உயிரிழப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கொரோனா பாதித்தவர்கள் அதிகமாவதற்கு பிஏ4, பிஏ5 வகை வேரியண்ட்தான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முகக் கவசம் அணிவதும் , சமூக இடைவேளையை கடைபிடிப்பதும்தான். இதற்கு சரியான தீர்வு என்று மருத்துவர்கள்  வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் துணை நோய் உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள்  கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி 1,938 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 984 பேரும், செங்கல்பட்டில் 375 பேரும், கோவையில் 118 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 119 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 169 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் இதுவரை கொரேனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 34,18,481 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/first-covid-death-after-3-months-in-thanjavur-467415/